7 வயது சிறுமி வன்கொடுமை! நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்!! நயினார் ஆவேசம்!!
கரூரில் 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த மதுபோதை வாலிபரும், கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து ஆட்சி நடத்தும் திமுகவும், தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் கிராமத்தில் 7 வயது சிறுமியை மது போதையில் இருந்த வாலிபர் ஒருவர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், குற்றவாளியும் திமுக அரசும் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தச் சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அரசியல் தலைவராக மட்டுமல்ல, ஒரு தந்தையாக இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட குழந்தை முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! மக்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிகிறது: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!
மேலும், திமுக அரசை கடுமையாக சாடிய அவர், “இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கீழ் போதையில் சிக்கியுள்ள தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அனைத்துக்கும் பின்னால் போதையின் கரங்கள் உள்ளன.
ஆனால், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று வீர வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் இத்துப்போய்விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சியை நடத்திக்கொண்டு ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற விளம்பரப் பதாகைகளை தூக்கிப் பிடிக்க திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.
நயினார் தனது அறிக்கையில், “மழலை மாறாத குழந்தையை சீரழித்த கொடும் குற்றவாளியும், கடந்த நான்கரை ஆண்டுகளாக பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து ஆட்சி நடத்தும் திமுகவும் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. போதைப்பொருள் மற்றும் மது பயன்பாட்டால் ஏற்படும் குற்றங்கள் அதிகரிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. திமுக அரசு இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காது கூசுற அளவுக்கு பேசுறாங்க!! வேடிக்கை பாக்காதீங்க ஸ்டாலின்! நயினார் நாகேந்திரன் தாக்கு!