நான்தான் அடிச்சேன்... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக சரணடைந்த தவெக நிர்வாகி...!
விஜய் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி சரணடைந்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் உற்சாகமாக நடத்தி வந்தார். அவரைக் காண அலைக்கடலென மக்கள் குவிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தது. கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வந்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கரூரில் நடந்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டு நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வேலுச்சாமிபுரம் தனியார் மருத்துவமனை அருகே 10க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸை சுற்றி வளைத்து தாக்கி மிரட்டினர். ஆம்புலன்ஸை எடுக்கவிடாமல், கல்லால் கண்ணாடி, லைட்டுகளை உடைத்தும் சேதப்படுத்தியதாக எஃப்.ஐ.ஆரில் தகவல் வெளியானது. உயிரைக் காப்பாற்ற வந்ததாக தெரிவித்தும் 10க்கும் மேற்பட்டோர் தன்னை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. கரூரில் ஆம்புலன்ஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கரூர் துயரத்திற்கு நீதி கிடைக்காது... சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு...!
என்ன நடந்தது என்பது குறித்து கரூர் நகர 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நீதிமன்றத்தை சரணடைந்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகி மணிகண்டன் என்பவர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இதையும் படிங்க: #karurstampede: நான் இருக்கேன்... கவலைப்படாதீங்க! ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த செந்தில் பாலாஜி...!