×
 

கரூரை தொடர்ந்து நாமக்கல்! புஸ்ஸி ஆனந்த் முதல் மதியழகன் வரை! தவெக நிர்வாகிகள் வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூரை தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக நிர்வாகிகள் மீது நாமக்கல் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவரும் நடிகருமான விஜய், 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி மற்றும் அரியலூரில் பிரசாரத்தைத் தொடங்கிய அவர், இரண்டாம் கட்டமாக நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

மூன்றாம் கட்டமாக செப்டம்பர் 27 அன்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்தார். ஆனால், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இதையடுத்து, TVK நிர்வாகிகள் மீது கரூர் மற்றும் நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

செப்டம்பர் 27 அன்று நாமக்கல் பி.கே.புதூர் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பிரசாரம் செய்து முடித்துவிட்டு, இரவு 7 மணியளவில் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியபோது, கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். உறவினர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் மயங்கியவர்களை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். 

இதையும் படிங்க: Karur Stampede! பிரதமர் மோடி கொடுத்த அசைன்மெண்ட்! கரூர் வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

முதலுதவி பெற்றவர்கள், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 10 குழந்தைகள், 18 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, கரூர் காவல்துறையினர் TVK நிர்வாகிகள் மீது கடுமையான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 

TVK பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காமை, அஜாக்கிரதையாக செயல்பட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் மட்டுமின்றி, நாமக்கல் பி.கே.புதூர் பகுதியில் நடந்த பிரசாரத்தைத் தொடர்ந்து, TVK நிர்வாகிகள் மீது நாமக்கல் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து இடையூறு, அனுமதியின்றி பேனர் வைத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள், TVK-வின் பிரசார நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளன.

TVK இந்த சம்பவத்தை "திட்டமிட்ட சதி" எனக் குற்றம்சாட்டி, மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. விசாரணை கோரி மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது, மேலும் விஜய் தனிப்பட்ட முறையில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். 

பிரதமர் மோடி, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000-உம் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த சம்பவம், பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை முடிவுகள் மற்றும் TVK நிர்வாகிகள் மீதான வழக்குகளின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: நெஞ்சை உலுக்கும் சோகம்! கரூர் செல்கிறார் விஜய்! தவெக-வினர் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share