கரூர் துயரச்சம்பவம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கியது தவெக...!
கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை தமிழக வெற்றிக் கழகம் வழங்கியது.
தமிழக அரசியல் அரங்கில் புதிதாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் பரப்புரை பயணம், எதிர்பாராத துயரத்தைத் தந்தது. 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி, கரூர் நகரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல், ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது.
குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த இந்த அவலத்தில், மூன்று நிலைகளில் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் த.வெ.க சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன. முதலில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க அறிவிக்கப்பட்டது.
காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கியது.
இதையும் படிங்க: கரூர் ஆறாத வடுக்கள்... தவெகவினர் தீபாவளி கொண்டாட வேண்டாம்... கட்சி தலைமை அறிவுறுத்தல்...!
த.வெ.க தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். அதன்படி கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் 20 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல... அதை செய்ய முடியாது... உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு...!