கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!
சம்பவ இடத்தின் காட்சிகள் சமர்ப்பிப்பு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை; விசாரணை அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணை.
தமிழகத்தையே உலுக்கிய நெல்லை மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில், மிக முக்கியத் திருப்பமாகச் சம்பவத்தன்று பதிவான சிசிடிவி (CCTV) காட்சிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த மின்னணு ஆதாரங்கள் வழக்கின் போக்கை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியைச் சேர்ந்த கவின், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெல்லையில் தனது காதலியின் தம்பி சுர்ஜித்தால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் சிசிடிவி காட்சிகள் தொடர்பாக நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. கவின் கொலை செய்யப்பட்ட கே.டி.சி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை, நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: பைனான்சியர் மிரட்டல் வழக்கு! - தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீது அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு
இந்த வழக்கின் தற்போதைய நிலை மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து, சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரி விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கொலையாளி சுர்ஜித் மற்றும் கொலைக்குத் தூண்டுகோலாக இருந்ததாகக் கூறப்படும் அவரது தந்தை எஸ்.ஐ. சரவணன் ஆகியோரின் நடமாட்டத்தை உறுதிப்படுத்த இந்த சிசிடிவி காட்சிகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கவின், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால், அந்தப் பெண்ணின் தம்பி சுர்ஜித்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன், தாய் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கவினின் குடும்பத்தார் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது சிசிடிவி ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், கொலையில் பெற்றோரின் நேரடிப் பங்களிப்பு குறித்துத் தெளிவான உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கமல்ஹாசனின் பெயர், போட்டோக்களை யூஸ் பண்ணக்கூடாது..!! கறார் காட்டிய ஐகோர்ட்..!!