×
 
☰

கவின் ஆணவக் கொலை...! "எங்கள் மகனுக்கு நீதி வேண்டும்"..! பெற்றோர் காத்திருப்பு போராட்டம்!

கவின் பெற்றோர் நீதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், 2025 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளம் பொறியாளர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்த காரணத்தால் நடந்த இந்த ஆணவக் கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதலியின் சகோதரர் சுர்ஜித் இந்தக் கொலையைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளூர் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. ஆனால் வழக்கின் தன்மை மற்றும் சமூக உணர்வுகளைக் கருத்தில் கொண்டு அது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் சார்பு ஆய்வாளர்களாகப் பணியாற்றி வந்தனர். அவர்களும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். உறவினர் ஜெயபாலும் கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி விசாரணைக்குப் பிறகு நெல்லை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் சுர்ஜித் உள்ளிட்டோருடன் பெற்றோரும் இணைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் சுர்ஜித்தின் பெற்றோர் தங்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். நீதிபதி விஜயகுமார் முன் நடந்த விசாரணையில், கொலைக்குப் பிறகு பெற்றோர் மகனைச் சந்தித்து ஆதாரங்களை அழிக்க உதவியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கருதப்பட்டது. நேரில் கண்ட சாட்சிகள், சிசிடிவி பதிவுகள் அல்லது சுதந்திரமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கவின் கொலை வழக்கில் சுஜித் பெற்றோர் விடுவிக்கப்பட்டது ஏன்?... வெளியானது பரபரப்பு பின்னணி...!

உறவினர் ஜெயபால் மீதான மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து கவினின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ள தங்கள் வீட்டின் முன்பு கவினின் புகைப்படத்தை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலையில் குற்றப்பத்திரிகை ரத்து..! தவறான முன் உதாரணம்... திருமா. எதிர்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share