×
 

உலக யானைகள் தினத்தில் சோகம்! வாளையாறில் ரயில் மோதி தாய், குட்டி யானைகள் பலி! கண்ணீர் சம்பவம்!

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதிய விபத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் மற்றும் குட்டி யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

கேரளா–தமிழக எல்லை அருகே ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 12ம் தேதியே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது கவலையை அதிகரித்துள்ளது.

தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், வாளையார் அருகே சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் தாய் யானையும் அதன் குட்டியும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரு யானைகள் மீதும் மோதியது.

ரயில் மோதியதில் யானைகள் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே இரண்டும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

இதையும் படிங்க: மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

இந்த விபத்து குறித்து தமிழக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற பகுதி தமிழக எல்லையில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் கேரள எல்லைக்குள் அமைந்துள்ளதாக தெரிவித்தனர். மதுக்கரை வனப்பகுதியில் இருந்து கேரளாவை நோக்கி செல்லும் ரயில் பாதையின் அந்த பகுதியில் வளைவு மற்றும் பாலம் இருப்பதாகவும், இதனால் யானைகளை லோகோ பைலட் முன்கூட்டியே கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இதுபோன்ற விபத்துகள் ஏற்கனவே அந்த பகுதியில் நடந்துள்ளன. கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் இதே மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, கருவுற்ற பெண் யானை உட்பட 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் உள்ள ரயில் பாதைகளில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. யானைகள் தண்டவாளத்தை நெருங்கும்போது அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் தமிழகப் பகுதியில் சமீப காலங்களில் ரயில் மோதலால் யானைகள் உயிரிழப்பது குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோன்ற நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு முறைகளை கேரளாவிலும் பயன்படுத்தி, யானைகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.

தாய் யானையையும் குட்டியையும் ஒரே நேரத்தில் இழந்துள்ள இந்த சம்பவம், ரயில் பாதைகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இன்னும் கூடுதல் நடவடிக்கைகள் தேவை என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் விக்ரம் வீடியோவால் சர்ச்சை! சிக்கியதா மிகப்பெரிய வனவிலங்கு கடத்தல் கும்பல்? புதிய ட்விஸ்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share