கிட்னி திருட்டு.. கூண்டோடு சிக்கும் புரோக்கர்கள்! ஹாஸ்பிடல்களுக்கு பறந்த நோட்டீஸ்.. அடுத்தடுத்த உத்தரவுகள்..!
கிட்னி புரோக்கர்கள் எங்கெல்லாம் செயல்படுகிறார்கள், எந்தெந்த மருத்துவமனையில் முறைகேடாக கிட்னி பெறுகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக, கோழிப்பண்ணை மற்றும் முட்டை ஏற்றுமதி தொழிலில் புகழ்பெற்றிருந்தாலும், சமீபத்தில் சட்டவிரோத கிட்னி விற்பனை தொடர்பான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம், மற்றும் திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் விசைத்தறி மற்றும் கோழிப்பண்ணைத் தொழில்களில் பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்கள் பெரும்பாலான மக்களாக உள்ளனர்.
இவர்களின் பொருளாதார வறுமையைப் பயன்படுத்தி, சில கும்பல்கள் சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்யும் நெட்வொர்க்கை இயக்குவதாக கூறப்படுகிறது. வறுமையில் வாடும் தொழிலாளர்களை குறிவைத்து, அவர்களுக்கு மிகக் குறைந்த தொகையை வாக்குறுதியாக அளித்து, அவர்களின் கிட்னியை பறிக்கும் செயல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்த கிட்னிகள் சந்தையில் 10 முதல் 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆதார் அட்டையில் முகவரி மாற்றப்பட்டு, மோசடி செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் புரோக்கர்கள் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நாமக்கலில் கிட்னி விற்பனை நடப்பது தொடர்பாக ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாய்த்து கவுன்சிலர் பாலசுப்ரமணியம், முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு ஆதாரத்துடன் புகார் அனுப்பினார். தகவலறிந்த பள்ளிப் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அணுஅணுவாக சித்திரவதை.. மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்! தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை..!
இந்த நிலையில், திருச்சி சித்தார் மருத்துவமனை, ஈரோடு அபிராமி மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனரகம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஊரக நலப்பணி இயக்குனர்கள் கிட்னி விற்பனை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கிட்னி புரோக்கர்கள் எங்கெல்லாம் செயல்படுகிறார்கள், எந்தெந்த தனியார் மருத்துவமனையில் சட்டவிரோதமாக கிட்னி பெறப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரவுடியை துடிக்கத் துடித்துக் கொன்ற கும்பல்..! 4 பேரை பிடித்து போலீஸ் தொடர் விசாரணை..!