கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறப்பு? சென்னை ரயில்வே கோட்டம் முக்கிய தகவல்!
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தீபாவளிக்கு முன் அல்லது பின் திறக்க வாய்ப்புள்ளதாக சென்னை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்குட்பட்ட புதிய திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் வருவாய் விவரங்கள் குறித்துச் சென்னை சென்ட்ரல் பார்க் டவுனில் உள்ள கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் செந்தில்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார். அப்போது கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
ரூ.720 கோடி மதிப்பீட்டில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் பாரம்பரியத் தன்மை மற்றும் பழமை மாறாமல் மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் திட்டமிட்டபடி வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய வேண்டும் என்ற போதிலும், களப்பணிகளின் தன்மை காரணமாக ஓரிரு மாதங்கள் கூடுதல் அவகாசம் ஆகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் வரலாற்றில் முதல் முறையாக சென்னை கோட்டம் ரூ.5,038.30 கோடி வருவாய் ஈட்டி ரூ.5,000 கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த 2024–25 நிதியாண்டை விட 9.26% அதிகமாகும். சரக்கு கையாளுதலில் 1.13 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு 6.25% வளர்ச்சியையும், 47.298 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றதன் மூலம் சிறப்பான மைல்கல்லையும் எட்டியுள்ளது. 87.04% மெயில் மற்றும் விரைவு ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன. பயணிகள் நெரிசலைச் சமாளிக்க 3,559 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதோடு, 1,557 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக உணவுகளில் க்யூஆர் கோடு (QR Code) முறையிலான குறைதீர் அமைப்பும், சென்னை சென்ட்ரலில் Rail Post Restaurant ஒப்பந்தமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மூலம் காணாமல் போன 630 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை மெட்ரோவின் அடுத்த மெகா திட்டம்... கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ பணிகள்..!! எகிறும் எதிர்பார்ப்பு..!!
ரயில்வே வாரியம் சென்னை மண்டலத்தில் 4 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.926.52 கோடி மதிப்பீட்டில் 67.79 கி.மீ நீள அரக்கோணம்–செங்கல்பட்டு இரட்டை ரயில்பாதை திட்டம் (தற்போது 13 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், பணி முடிந்ததும் 80 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது), ரூ.713.5 கோடி மதிப்பீட்டில் 2030-க்குள் அமையவுள்ள தாம்பரம்–செங்கல்பட்டு 4-வது பாதை, ரூ.365.42 கோடியில் ஆத்திப்பட்டு–கும்மிடிப்பூண்டி 3 மற்றும் 4-வது வழித்தடம் மற்றும் ரூ.129 கோடியில் வில்லிவாக்கம்–அம்பத்தூர் 5 மற்றும் 6-வது வழித்தடத் திட்டங்கள் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் வீரன், VSOP உள்ளிட்ட 11 மதுபானங்கள் விற்பனைக்கு அதிரடித் தடை: FSSAI உத்தரவு!