ரூ.1020 கோடி டெண்டர் முறைகேடு... அமைச்சர் நேருவுக்கு எதிராக அதிமுக வழக்கு... விசாரணைக்கு ஏற்ற ஹைகோர்ட்..!
அமைச்சர் கே. என். நேருவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் கே.என்.நேரு மீது, அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினரும் கட்சியின் சட்டத்துறை செயலாளருமான ஐ.எஸ். இன்பதுரை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான துறையில் நடந்ததாகக் கூறப்படும் பெரும் அளவிலான ஊழல் குறித்து அமலாக்கத்துறை வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கண்டறிந்தது. குறிப்பாக, சுமார் 1,020 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களில், ஒப்பந்ததாரர்களிடமிருந்து 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், இது அமைச்சர் கே.என்.நேருவுடன் தொடர்புடைய நபர்களால் நடத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த ஊழல் தொகை கட்சி நிதியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அமலாக்கத்துறை ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாட்சியங்களின் அடிப்படையில் தெரிவித்தது.
இதனடிப்படையில், அமலாக்கத்துறை 2025 அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதங்கள் அனுப்பி, அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால், தமிழக அரசு தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, அதிமுக எம்.பி இன்பதுரை முதலில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அதற்கு பதிலளிக்கப்படாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்பதுரை மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி ஊழல் விவகாரத்தில் கே.என்.நேரு விரைவில் கைது? - தேதி குறித்த நீதிமன்றம்... அதிரடி காட்டும் ED...!
இன்பதுரை தாக்கல் செய்த மனுவில் பிழைகள் உள்ளதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டது. இதனிடையே அதிமுக சார்பில் இன்பதுரையின் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நெல்லை மக்களே ரெடியா?... ரூ.356 கோடியில் பிரம்மாண்ட திட்டங்கள்... அமைச்சர் கே.என்.நேரு சொன்ன குட்நியூஸ்...!