கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி... காலி மதுபாட்டிலை திருப்பி கொடுக்கும்போது நடந்த விபரீதம்...!
கிருஷ்ணகிரி அருகே காலி மது பாட்டிலைத் திருப்பிக் கொடுக்கும்போது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே ஊட்டியைச் சேர்ந்த வாலிபரை கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்த 33 வயதான அருண்குமார், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் வேளாண் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்றிரவு தனது நண்பர்களான ஊத்தங்கரை, வெங்கடதம்பட்டியைச் சேர்ந்த தீபன்ராஜ், இன்பசேகர், மதன் மற்றும் பாரதிராஜா ஆகியோருடன் சானம்பட்டி சாலையில் உள்ள குறிஞ்சி நகர் டாஸ்மாக் கடை அருகே அனுமதி பெறாத பாரில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
இந்நிலையில், அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தபோது டாஸ்மாக் கடை மூடப்பட்டு ஊழியர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதையடுத்து, மது அருந்திவிட்டு அனுமதி பெறாத பாரில் காலி பாட்டில்களை கொடுத்து பணம் வாங்குவதற்காக தீபன்ராஜும் அருண்குமாரும் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: அனுதாபம் தேடுவதா? டாஸ்மாக் வழக்கில் செந்தில் பாலாஜி ஆதரவாளருக்கு சிக்கல்... ஜாமின் மனுவில் நீதிமன்றம் காட்டம்!
அப்போது, அவர்களுக்கும் பாரில் இருந்த கார்த்திக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கார்த்திக்கும் அவரது தந்தை கோவிந்தராஜும் சேர்ந்து அருண்குமாரை தாக்கியுள்ளனர்.
இதனால், தீபன்ராஜும் அவரது நண்பர்களும் இரு தரப்பினரையும் விலக்கி அழைத்துச் சென்றுள்ளனர். டாஸ்மாக் கடையில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சென்றபோது, கோபம் தணியாத கார்த்திக் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, கல்லால் அருண்குமாரை தாக்கியுள்ளார்.
இதில், அருண்குமாரின் பின்பக்கக் கழுத்தில் காயம் ஏற்பட்டு, அவர் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்துள்ளார். அவரைத் துரத்தி வந்த கார்த்திக், கல்லால் மீண்டும் மீண்டும் அவரது தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. படுகாயங்களுடன் மயங்கி கிடந்த அருண்குமாரை அவரது நண்பர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அருண்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முடிந்ததை செய்யட்டும்!! பார்த்துக் கொள்ளலாம்! இலாகாவை மாற்ற அழுத்தமா? அமைச்சர் விக்னேஷ் அதிரடி!