"குழந்தைகளை பலி கொடுக்கவா ஆட்சி"..? மௌனம் வேண்டாம் முதல்வரே..! கிருஷ்ணசாமி ஆதங்கம்..!!
தமிழகத்தில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து இருப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரே நாளில் ஐந்து பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் விஜயின் அர்த்தமற்ற மௌனம், பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
நேற்றைய தினம் ஒரே நாளில் மட்டும், மூன்று வயது முதல் 12 வயது வரையிலான ஐந்து பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு, அதில் ஒரு குழந்தை படுகொலை செய்யப்பட்ட செய்திகள் நமக்கு மட்டுமல்ல; தமிழகமெங்கும் வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் ஆழ்ந்த கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டியில் புலம்பெயர் தொழிலாளியின் 3 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நேற்று அதிகாலை மரணமடைந்துள்ளார். பூந்தமல்லியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி, தாம்பரம் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, திருவள்ளூர் பகுதியில் 7 வயது சிறுமி, சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை என தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் நாம் ஒரு நாகரீக சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என எண்ணும் வகையில் கொடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி கொடூரம்..! பிஞ்சு உயிர் பறிபோன சோகம்... பெற்றோருக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்..!!
ஒன்றரை லட்சம் காவலர்களை வைத்தும், 2,500 பேரைக் கொண்ட 'சிங்கப்பெண்கள்' சிறப்புப் படையை வைத்தும் என்ன பலன்? தான் முதலமைச்சராக வேண்டுமென்ற கனவு நிறைவேறினால் மட்டும் போதுமா? தங்களது குழந்தைகளை பலி கொடுக்கவா உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தார்கள்? என சரமாரி கேள்விகளை முன் வைத்தார். எச்சரிக்கையோடும் பொறுப்போடும் இனியாவது விழித்துக் கொண்டு செயல்படுங்கள் என்றும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பிற குடிமக்களின் வாழ்வுரிமையை பாதுகாத்திடுங்கள் எனவும் முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!