வி.எஸ். பாபுவுக்கு என்ன ஆச்சு..? எதுக்கு இவ்ளோ கமுக்கம்..? கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி..!!
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபுவுக்கு என்ன ஆனது என்பது குறித்து வெளிப்படை தன்மை இல்லாமல் வைத்திருப்பதாக கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்களின் உடல்நலம் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் வைத்திருப்பது அரசுக்கும் அழகல்ல., மருத்துவமனைக்கும் மாண்பல்ல என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகிவிட்டது.
அவசர நோயாளியாகச் சேர்க்கப்பட்ட அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் கோளாறு இருப்பதாக மருத்துவமனையின் செய்திக் குறிப்பு மூலம் தெரியவந்தது. அதன்பிறகு ஓரிரு முறை ‘முன்னேற்றம்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டன.அவர் சாதாரண குடிமகன் என்றால் உடல்நிலை குறித்து பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் மக்கள் பிரதிநிதி. கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் பொதுமக்களுக்கும் அவரது உடல்நலம் குறித்து அரசு தெரிவித்தாக வேண்டும்.அவர் பெரிய வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. சென்னையிலேயே உயர்தர சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகள் உள்ளன.
இருந்தும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர்கிறது. மருத்துவச் செலவுகளை அரசா? குடும்பமா? கட்சியா? ஏற்கிறது என்பதும், தற்போதைய உடல்நிலையும் வெளிப்படைத்தன்மையின்றி வைக்கப்பட்டிருப்பது மருத்துவமனைக்கும் மாண்பல்ல; அரசுக்கும் அழகல்ல.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு முக்கியத் தலைவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதை விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டிய சூழல் கூட ஏற்பட்டது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு: நேரில் நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!
எனவே, தற்போது பாபுவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முழுமையாக குணமடைய உதவும் வகையில் உள்ளதா? அல்லது இங்கு போதிய சிகிச்சை இல்லாததால் அரசு செலவில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.நாட்கணக்கில், மாதக்கணக்கில் மக்கள் பிரதிநிதிகளை மருத்துவமனைகளில் ‘சிகிச்சை’ என்ற பெயரில் கமுக்கமாக வைத்திருப்பது முறையானதல்ல. அவரது இன்றைய உடல்நலம், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை, அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!