பக்தர்களுக்கு குட் நியூஸ்.! 14 திவ்யதேச தரிசனத்துக்கு சூப்பர் ஏற்பாடு... பேருந்து சேவை தொடக்கம்..!!
14 திவ்யதேச தரிசனத்துக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து சேவை தொடங்கியது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டம் சார்பில் ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேச திருக்கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் சிறப்பு ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கும்பகோணம், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள முக்கிய வைஷ்ணவ திருத்தலங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒரே பயணத்தில் பதினான்கு திவ்யதேசங்களை தரிசித்து திரும்பும் வாய்ப்பை இது வழங்குகிறது.
இந்த சிறப்பு பேருந்து சேவை அக்டோபர் 3, 2026 சனிக்கிழமையான இன்று தொடங்கியது. இனி வரும் காலங்களில் இது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும். பயணம் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கு புறப்படும். நாள் முழுவதும் திருக்கோயில்களில் தரிசனம் செய்த பின் இரவு எட்டு மணிக்கு மீண்டும் அதே நிலையத்துக்கு வந்து சேரும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்மிக சுற்றுலாவில் பின்வரும் திருக்கோயில்கள் அடங்கும். சீர்காழியில் உள்ள ஸ்ரீ தாடாளன் பெருமாள் திருக்கோயில், திருவள்ளக்குளத்தில் அண்ணன் பெருமாள் கோயில், திருநகரியில் ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் திருக்கோயில், திருமணிக்கூடத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில், வைகுண்ட விண்ணகரத்தில் ஸ்ரீ வைகுண்ட நாதர் திருக்கோயில், திருநாங்கூரில் உள்ள ஸ்ரீ வண்புருஷோத்தமன் பெருமாள் கோவில் அடங்கும்.
இதையும் படிங்க: லாட்ஜில் பெண்களை வைத்து பாலியல் தொழில்! திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
மேலும், ஸ்ரீ செம்பொன் அரங்கர் திருக்கோயில்கள், திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில், அரிமேய விண்ணகரத்தில் ஸ்ரீ குடமாடும் கூத்தர் திருக்கோயில், மணிமாடக்கோயிலில் ஸ்ரீ நாராயண பெருமாள் திருக்கோயில், மயிலாடுதுறை திருஇந்தளூரில் திரு பரிமள ரங்கநாத ஸ்வாமி திருக்கோயில், சேங்கனூரில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயில், நாச்சியார் கோயிலில் ஸ்ரீ நாச்சியார் நம்பி திருக்கோயில் மற்றும் திருக்குடந்தையில் ஸ்ரீ சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: 2028 மார்ச் 9-ல் கும்பகோணம் மகாமகம்! ரூ.600 கோடியில் வளர்ச்சிப் பணிகள் என அமைச்சர் ரமேஷ் தகவல்!