பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு? தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் மு.வீரபாண்டியன்!
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிவாரண அறிவிப்பும் பயிர்க்கடன் தள்ளுபடியும் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக சிபிஐ மாநில செயலாளர் மு வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2026–2027-ஆம் நிதியாண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான அத்தியாவசிய நிவாரண அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது பெரும் ஏமாற்றமளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடகச் செய்தியில், வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடியும், இலவச மின்சார மானியத்திற்கு ரூ.7,432 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 'தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்', 'பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்' மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ஏஐ உழவர் செயலி’ போன்ற புதிய திட்டங்களும், 5 இடங்களில் வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எல்நினோ தாக்குதலால் தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படும் என வானிலை ஆய்வுகள் எச்சரித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான சிறப்புத் திட்டங்களோ, மழைநீர் சேமிப்பு மற்றும் தடுப்பணைகள் கட்டும் திட்டங்களோ பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடி பொய்த்து வருமானம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் எந்தவொரு நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை என்றும் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: தலைதூக்கும் காவிரி பிரச்சனை... அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஓங்கும் குரல்கள்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!
நெல் உற்பத்திச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், கொள்முதல் விலையைக் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகக் கூறியுள்ளார். அத்துடன், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், பிற விவசாயிகளுக்கு 50 சதவீதக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்திப் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், அதுகுறித்துப் பட்ஜெட்டில் மெளனம் சாதித்திருப்பது உழவர் சமூகத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாக மு.வீரபாண்டியன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது பிரச்சனை... செவி சாய்க்காத கர்நாடகா... மௌனத்தில் மத்திய அரசு..! CPI ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!