தனுஷின் 'கர' படத்திற்குச் சிக்கல்: தலைப்பு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர' திரைப்படத்தின் தலைப்புக்குத் தடை விதிக்கக் கோரி, சேலத்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர' திரைப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு தொடர்பான இந்தப் புதிய சட்டச் சிக்கல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பூவாய் அம்மன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதன் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "'கர' என்ற திரைப்படத் தலைப்பைத் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் முறையாகப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அந்தப் பெயரில் எங்கள் நிறுவனம் சார்பில் திரைப்படம் எடுப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அதே பெயரில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படத்தை வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது எங்களது உரிமையைப் பாதிக்கும் செயலாகும். எனவே, அந்தப் பெயரை மாற்றாமல் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது. பொதுவாகப் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் நேரத்தில் இது போன்ற தலைப்புப் பிரச்சனைகள் வருவது வழக்கமான ஒன்று என்றாலும், தனுஷ் போன்ற முன்னணி நடிகரின் படத்திற்குத் தடை கோரப்பட்டிருப்பது படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கிடையில், தனுஷ் தரப்பு வழக்கறிஞர்கள் இந்த விவகாரம் குறித்துத் தங்களது விளக்கத்தை நீதிமன்றத்தில் அளிக்கத் தயாராகி வருகின்றனர்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!" - சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் ஆவேசம்!
இதையும் படிங்க: "விஜய்க்கு போடும் ஓட்டு பாஜக-விற்கே!" - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அதிரடி!