ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்!
ஆயுத பூஜையை முன்னிட்டு 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு லெஜெண்ட் சரவணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அகில இந்திய லெஜெண்ட் சரவணன் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் சென்னை பாடியில் உள்ள சரவணா ஸ்டோரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக மறைந்த தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் குறித்து மேடையில் விரிவாகப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து இந்த ஆயுத பூஜை விழாவைக் கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மறைந்த இசையமைப்பாளர் தேவா அவர்கள் ஒரு சிறந்த கலைஞராக மட்டுமல்லாமல் அனைவரிடமும் இனிமையாகப் பழகக்கூடிய நல்ல மனிதர் அவரது மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
இதையும் படிங்க: சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசியபோது பல அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள். முன்பு ஒரு நாளைக்கு 15 சவாரிகள் சென்ற நிலையில், தற்போது 5 சவாரிகள் கிடைப்பதே பெரும் சிரமமாகிவிட்டது. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழக அரசுக்குத் தங்களது நியாயமான பல கோரிக்கைகளை வைத்தும் அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
தமிழக முதல்வருக்கு எனது பணிவான, அன்பான வேண்டுகோள். இந்த ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை முதலமைச்சர் நினைத்தால் ஒரே நொடியில் நிறைவேற்றிக் கொடுக்க முடியும். இந்தியாவில் இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. அதேவேளையில் குழந்தைகள், பெரியவர்கள் என முழுக் குடும்பமாகவும் ஆட்டோவில் பயணிக்கும் சூழலும் உள்ளது. பயணிகளைத் தங்களது சொந்த குடும்பத்தினராகவும் சகோதரர்களாகவும் கருதும் உணர்வை ஓட்டுநர்கள் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
அனைத்து இடங்களிலும் நாளும் பயணிப்பது நீங்கள்தான்; எனவே எங்கு தவறு நடந்தாலும் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவியுங்கள். தொழிலோடு சேர்த்து மக்களுக்கான சேவையையும் செய்ய வேண்டும். மேலும், தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை காலங்களில் அரசு வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படாதவாறு கவனமாகப் பணியாற்ற வேண்டும் என்று லெஜெண்ட் சரவணன் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தினசரி ரூ.100 கூட வருமானம் இல்லையா? அரசிடம் ரூ.3,000 கோரிக்கை வைக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்!! காரணம் என்ன..??