LIC பெண் ஏஜென்டின் காரை கொளுத்திய போலீஸ்..! ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு..!!
எல்ஐசி பெண் முகவரின் காரை கொளுத்திய போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எல்.ஐ.சி பெண் முகவரின் காரை தீயிட்டு கொளுத்திய போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள சங்கரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (42). கணவரை இழந்த இவர், தனது மகன் மற்றும் மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் எல்.ஐ.சி முகவராகப் பணியாற்றி வருகிறார். கொள்ளிடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சத்தியராஜ் என்பவரிடம் காப்பீடு எடுக்குமாறு புவனேஸ்வரி அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. நாளடைவில், சத்தியராஜ் புவனேஸ்வரியிடம் தவறான நோக்கத்தோடு பேச முயன்றுள்ளார்.
இதைப் புரிந்துகொண்ட புவனேஸ்வரி, சத்தியராஜின் தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு புவனேஸ்வரியின் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது சொகுசு காருக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்துள்ளார். அந்தத் தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு நபரின் காரிலும் பரவியதால், இரண்டு சொகுசு கார்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து புவனேஸ்வரி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: காவல் வாகனத்திலேயே கண் அசந்த போலீஸ்... கை விலங்குடன் தப்பியோடிய கைதி... ராசிபுரத்தில் நடந்தது என்ன?
புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காவலர் சத்தியராஜ் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து இறங்குவது தெரியவந்தது. பின்னர் அவர், புவனேஸ்வரியின் காரின் கண்ணாடியை உடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது விசாரணையில் அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து, காவலர் சத்தியராஜ் மீது கொள்ளிடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், தவறிழைத்த காவலர் சத்தியராஜை உடனடியாக ஆயுதப்படை பிரிவு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லையா?... மதுரை உளவுத்துறை காவலர் மீது கொலைவெறி தாக்குதல்...!