காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!
நகரப் பகுதிகளில் வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) பயன்படுத்தும் நகரவாழ் மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. நகரப் பகுதிகளில் வீட்டு உபயோகச் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்த மாற்றங்கள் நாளை (மே 1) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன.
தற்போதைய நடைமுறைப்படி, நகரங்களில் ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்ததிலிருந்து அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால், புதிய விதியின்படி இந்த கால இடைவெளி 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு சிலிண்டர் வாங்கிய 25 நாட்களுக்குப் பிறகுதான் அடுத்த சிலிண்டருக்குப் பதிவு செய்ய முடியும். ஒருவேளை அவசரம் கருதி 25 நாட்களுக்கு முன்னதாகவே வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய முயன்றால், அதனை முன்பதிவு செய்யும் மென்பொருள் தானாகவே (Automatically) நிராகரித்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்காக அமையட்டும்": மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அறிவுரை!
நகரங்களுக்கு இந்தப் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப் பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 45 நாட்கள் இடைவெளி எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைச் சீரமைக்கவும், தேவையற்ற இருப்பைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தத் திடீர் மாற்றத்தால் நடுத்தர மற்றும் பெரிய குடும்பத்தினர் தங்களது எரிவாயு பயன்பாட்டைச் சிக்கனமாகத் திட்டமிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாதம் ஒரு சிலிண்டர் தீர்ந்துவிடும் நிலையில் உள்ள குடும்பங்கள், இந்த 25 நாள் கட்டாய இடைவெளியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!