×
 

மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

சட்டமன்றத் தேர்தலில் மகளிர் சக்தியின் பேராதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் அரியணை ஏறுவது உறுதி என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்குச் சொத்துரிமை பெற்றுத்தந்தது முதல் விடியல் பயணத் திட்டம் வரை, தமிழகப் பெண்களின் முன்னேற்றத்திற்காகத் திராவிட இயக்கம் தொடர்ந்து புரட்சி செய்து வருகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருப்பூரில் நடைபெற்று வரும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் தலைமை தாங்கிப் பேசிய அவர், மகளிர் நலனுக்காகத் தனது அரசு செயல்படுத்தி வரும் சாதனைகளைப் பட்டியலிட்டதுடன், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டினார். மாநாட்டைப் பிரம்மாண்டமாக ஒருங்கிணைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தங்கை கனிமொழி ஆகியோருக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார்.

திருப்பூர் மண்ணில் திரண்டுள்ள லட்சக்கணக்கான பெண் சிங்கங்களுக்கு மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எந்தக் களத்தில் இறங்கினாலும் கொடுத்த பணியைப் பிரம்மாண்டமாகச் செய்யக்கூடிய ஆற்றல் மிக்க சகோதரர் செந்தில் பாலாஜிக்கும், நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரலாக ஒலிக்கும் அன்புத் தங்கை கனிமொழிக்கும் எனது முதல் நன்றிகள்” எனத் தனது உரையைத் தொடங்கினார். கனிமொழியைப் பன்முகத் திறமை கொண்ட கவிஞர் என்றும், நாடாளுமன்றத்தில் உரிமைக்காகக் கத்திரி மொழியில் பேசக்கூடியவர் என்றும் அவர் புகழ்ந்தார். தேர்தல் என்று வந்துவிட்டாலே திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ‘ஹீரோ’வாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், பெண்களுக்குச் சொத்துரிமை, தேவதாசி முறை ஒழிப்பு எனத் திராவிட இயக்கம் செய்த வரலாற்றுச் சாதனைகளை நினைவு கூர்ந்தார்.

இதையும் படிங்க: தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படும்; இலங்கை அரசு கண்காணிக்கப்படுகிறது! மத்திய அமைச்சர் எஸ்.பி. சிங் அதிரடி உறுதி!

வடமாநிலங்களில் பெண்கள் நுகர்வோர் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைகள் விதிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் ஆப்பிள் தொழிற்சாலைகளில் ஐபோன்களை அசெம்பிள் செய்வது நமது பெண்தான் என்பதுதான் திராவிட மாடல் புரட்சி என அவர் முழங்கினார். “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக அரசு தேவையற்ற நிபந்தனைகளோடு நிறைவேற்றியுள்ளது; இது எப்பொழுது அமலுக்கு வரும் என்றே தெரியவில்லை. இது ‘ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெட்’ என்பது போலத்தான் இருக்கிறது” என ஒன்றிய அரசைச் சாடினார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டைத் தந்த நாம், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர்களுக்கு உரிய அதிகாரம் கிடைக்கத் தொடர்ந்து போராடுவோம் என உறுதி அளித்தார்.

அரசின் நலத்திட்டங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் 1.30 கோடி சகோதரிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுத் தற்சார்புடன் வாழ்கிறார்கள். இதுவரை ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் தலா 28,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். ‘விடியல் பயணம்’ திட்டத்தின் மூலம் பெண்கள் இதுவரை 900 கோடி முறை இலவசமாகப் பயணம் செய்து சேமிப்பை அதிகரித்துள்ளதாகவும், ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் மூலம் 7 லட்சம் மாணவிகள் உயர்கல்வி பெற்று வருவதாகவும் அவர் பட்டியலிட்டார். குறிப்பாக, பெண்களின் சமையலறைச் சுமையைக் குறைக்கவே ‘காலை உணவுத் திட்டம்’ கொண்டு வரப்பட்டது என்றும், இதன் மூலம் 19 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். “பெண்கள் பெயரில் பதியப்படும் சொத்துக்களுக்குப் பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதச் சலுகை வழங்கப்படுகிறது. இன்று தமிழகத்தின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பாதிக்கும் மேலானவற்றை பெண்களே வழிநடத்துகிறார்கள்” எனத் தமிழகப் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தைப் பறைசாற்றினார்.

இதையும் படிங்க: ராயப்பேட்டையில் அலைமோதும் கூட்டம்! அதிமுக வேட்பாளர் விருப்பமனு நீட்டிப்பு - எடப்பாடியார் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share