×
 

கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு! சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

கல்லட்டி மலைப்பாதை வழியாக சுற்றுலா வாகனங்கள் உதகைக்கு வர புதிய கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகைக்குச் செல்லும் புகழ்பெற்ற கல்லட்டி மலைப்பாதை வழியாக நாளொன்றுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 200 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும் என நிபந்தனைகளுடன் கூடிய புதிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சுற்றுலா நகரமான உதகையைக் காணத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் பயணிகள் முதுமலையிலிருந்து மசினகுடி வழியாக அபாயகரமான 36 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட கல்லட்டி மலைப்பாதையையே பிரதானமாகப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் அப்பகுதியில் வனவிலங்குகளுக்குக் கடுமையான அச்சுறுத்தலும் இடையூறும் ஏற்படுவதாகக் கூறி, கல்லட்டி பாதையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழுத் தடை விதித்திருந்தது. முதுமலை மற்றும் சீகூர் சோதனைச் சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பு போடப்பட்டு சுற்றுலா வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வந்தன.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

இதன் காரணமாக மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வாழ்வாதாரமும், சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்த வணிகர்களின் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மக்கள் தொடர் கடையடைப்புப் போராட்டங்களில் ஈடுபட்டதுடன், மாவட்ட நிர்வாகத்திடமும் தொடர் மனுக்களை அளித்து வந்தனர். இதுதொடர்பான கள நிலவரத்தை மாவட்ட நிர்வாகமும் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய தற்காலிக அனுமதியை வழங்கினர். அதன்படி, கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்குச் செல்ல நாளொன்றுக்கு அதிகபட்சமாக 200 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். 

இந்த அனுமதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும். இது முற்றிலும் ஒரு தற்காலிக நடைமுறையே தவிர, நிரந்தர அனுமதி கிடையாது எனவும், சீசன் அல்லாத (Off-season) காலங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் கோடை சீசன் சமயத்தில் இந்தத் தளர்வு எக்காரணத்தைக் கொண்டும் பொருந்தாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மேலும், மாவநல்லா பகுதியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அதிநவீன சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களுடன் கூடிய நிரந்தரச் சோதனைச் சாவடியை வனத்துறை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும், அனுமதிக்கப்படும் 200 வாகனங்களின் விவரங்களை முறையாகப் பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. 

அதேசமயம், இப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்திற்கு இந்தத் தடை மற்றும் கட்டுப்பாடுகள் எதுவும் பொருந்தாது என்றும், அவர்கள் எவ்வித இடையூறுமின்றி வழக்கம்போல் சென்று வரலாம் எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share