×
 

புராதன கோவில்களில் இனி ஒரு செங்கல் கூட வைக்க முடியாது!  ஆணையம் அமைக்க தாமதம் செய்த அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை!

தமிழ்நாடு புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க காலதாமதம் செய்வதாக அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்,  புராதன கோவில்களில் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முன்பு வணிக வளாகம் கட்ட தடை கோரிய வழக்கில், தமிழ்நாடு புராதன சின்னங்கள் ஆணையம் அமைப்பது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் சுரேஷ் குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, புராதான சின்னங்கள் ஆணையம் தொடர்பான விதிகள் வகுக்கப்பட்டு விட்டதாகவும், ஆணைய தலைவரை தேர்வு செய்வதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்று, தொல்லியல் துறை இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்று பத்திரிகைகளில் ஏன் விளம்பரம் கொடுக்கவில்லை என்றும் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பை அனைவரும் பார்த்திருப்பார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினர். ஆணையம் அமைக்க விரும்பவில்லை என்றால் அதனை நீதிமன்றத்தில் தெரிவித்து விடலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: நாங்கள் தலையிட விரும்பவில்லை! சென்னை உயர்நீதிமன்றமே முடிவெடுக்கும்! ஜனநாயகன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

இதை மறுத்த அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர், ஆணையம் அமைப்பதற்கு வேண்டுமென்றே காலதாமதம் செய்யவில்லை. ஆணையத்துக்கு பணியாளர்கள் நியமிப்பது தொடர்பாக  அரசின் ஒப்புதல் பெற வேண்டி உள்ளதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் இதுவரை 5 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன என விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, புராதன சின்னங்கள் ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, நான்கு முன்னணி தமிழ் நாளிதழ்கள் மற்றும் இரண்டு ஆங்கில நாளிதழ்களில் ஒரு வாரத்தில் விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கி, அதன்பின் விண்ணப்பங்களை பரிசீலித்து மூன்று நபர்களை தேர்வு செய்து சீல் வைத்த உறையில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதுவரை புராதன கோவில்களில் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும்  உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

முன்னதாக தமிழகத்தில் மட்டுமே  தொன்மை வாய்ந்த கோவில்கள், கட்டிடங்கள் அமைந்துள்ளன என்றும் வேறு எங்கும் இது போன்ற கட்டிடங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நமது முன்னோர் கட்டிய இது போன்ற கட்டிடங்களை நாம் மீண்டும் அமைக்க முடியாது. அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "பெரியார் விருது விவகாரம்: வழக்கை முடிச்சு வச்ச கோர்ட்!" தமிழக அரசின் விருதுக்கு எதிரான மனு தள்ளுபடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share