இனி ஆயுசுக்கும் ஜெயில்தான்! காசியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது. சமூக ஊடகங்களில் அந்தரங்க படங்களை பகிர கூடாது என பெண்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் மாணவிகளைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டிய வழக்கில், நாகர்கோவிலைச் சேர்ந்த காசிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த இயற்கை மரணம் அடையும் வரையிலான ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூலை 14, 2026) உறுதி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. காசி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாகர்கோவிலைச் சேர்ந்த காசி, பெண்களைக் காதலிப்பதாகக் கூறி ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து, அவற்றைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டிப் பணம் பறித்து வந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்களில் 120-க்கும் மேற்பட்ட பெண்களின் 400 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்குப் பின், நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றம் காசிக்கு இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனையும், ரூ. 1.10 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து காசி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, காசிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிடத் தேவையில்லை எனக் கூறி தண்டனையை உறுதி செய்தது. மேலும், இத்தீர்ப்பின் போது தற்போதைய டிஜிட்டல் உலகில் வாழும் இளம் பெண்களுக்கு நீதிபதிகள் மிக முக்கியமான அறிவுரைகளையும், விழிப்புணர்வு எச்சரிக்கைகளையும் வழங்கினர்:
இதையும் படிங்க: மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!
தற்போதைய ஆன்லைன் சமூக ஊடகங்களில் நன்மைகள் இருந்தாலும், அதன் வழியே பாலியல் சுரண்டல்களும் அதிகம் நடைபெறுகின்றன. இளம் பெண்கள் ஒருவரிடம் எவ்வளவு நம்பிக்கையாகப் பழகினாலும், தங்களுடைய தனிப்பட்ட அந்தரங்கப் புகைப்படங்களைச் சமூக ஊடகங்கள் மூலமாக நண்பர்களிடம் கூடப் பகிரக் கூடாது. அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டி இளம் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே, தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட அந்தரங்கப் புகைப்படங்களைப் பதிவிடுவதை இளம் பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இந்தத் தீர்ப்பானது தற்போதைய சமூக ஊடக உலகில் பெண்களுக்கு ஒரு மிகச்சிறந்த பாடமாக அமைய வேண்டும் என்பதால், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இத்தீர்ப்பினை தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 3 வருஷமா உத்தரவிட்டும் அதிகாரிகளுக்கு உறைக்கலையா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!