×
 
☰

தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

தாமிரபரணி ஆற்றுப் பாலம் தொடர்பான முறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற்றது.

தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தாமிரபரணி ஆற்றுப் பாலம் தொடர்பான முறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற்றது. இந்த பாலத்தை கட்டியதில் குறைபாடுகள் இருந்ததாகவும், அதனால் அடிக்கடி சேதங்கள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் கூறி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நெல்லையிலிருந்து தூத்துக்குடி வரை சுமார் 47 கிலோமீட்டர் தொலைவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. அதில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே நீண்ட பாலம் கட்டப்பட்டது.

இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்வதால் பாலத்தின் மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால் பாலம் கட்டப்பட்டதிலிருந்தே அடிக்கடி ஓட்டைகள் விழுந்து சேதமடையும் நிலை தொடர்ந்து வருகிறது. சமீப காலத்தில் மட்டும் பல முறை பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. தற்காலிக பேட்ச் ஒர்க் மூலம் சரிசெய்யப்பட்டாலும் சில நாட்களிலேயே மீண்டும் அதே இடத்திலோ அல்லது அருகிலோ புதிய சேதங்கள் தோன்றுகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலம் கட்டும் பணியில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலத்தை முழுமையாக ஆய்வு செய்து தரமாக சீரமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். “பாலங்கள் அமைப்பதும், அவை பழுதடைவதும் வாடிக்கையாகவே உள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டண கொள்ளை மட்டும் செய்யப்படுகிறது. யாரும் தங்களை கேள்வி கேட்க முடியாது என்ற எண்ணத்தில் இது போல் செயல்படுகிறார்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பொதுமக்களிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் சாலைகள் மற்றும் பாலங்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதையும் படிங்க: வெளிநாட்டு நிதி பெறுவது உரிமை கிடையாது..! தன்னார்வ அமைப்புகளுக்கு செக்..! கோர்ட் அதிரடி கருத்து!

தரமான கட்டுமானம் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அடிக்கடி சேதமடைந்து மீண்டும் பழுதுபார்க்கும் சுழற்சி தொடர்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் குறிப்பிட்டனர். பாலம் கட்டப்பட்ட விவரங்கள், பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம், ஒப்பந்த விதிமுறைகள், சீரமைப்பு பணிகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்த முழுமையான விவரங்களை சமர்ப்பிக்கவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. 

 

இதையும் படிங்க: ஜெம் வீரமணி விவகாரம்... ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு... அமைச்சர்கள் மேல்முறையீடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share