×
 

திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்! அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? என ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.100 விரைவு தரிசன டிக்கெட் முறைகேடு மற்றும் ரூ.25 லட்சம் மோசடி தொடர்பான வழக்கில், உயரதிகாரிகளின் அலட்சியம் குறித்து ஐகோர்ட் மதுரைக்கிளை கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

திருச்செந்தூர் கோவிலில் தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்ததாகவும், அதன் மூலம் கோவிலுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் உள்ளிட்ட சில அதிகாரிகள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சிலர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: கோவில் நிலங்கள் குறித்து அதிரடி உத்தரவு: ஜூனுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் ஆர்டர்!

விசாரணையின் போது நீதிபதி பல முக்கிய கேள்விகளை முன்வைத்தார். கோவிலில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்றும், இத்தகைய மோசடி நீண்ட காலமாக நடந்திருந்தால் அதை கண்காணிக்க தவறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், ரூ.25 லட்சம் மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களின் குற்றப் பின்னணி என்ன என்பதையும் நீதிமன்றம் கேட்டறிந்தது. கோவிலின் மொத்த வருமானம் எவ்வளவு, வரவு-செலவு கணக்குகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, தினசரி எத்தனை பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள் போன்ற விவரங்களையும் நீதிமன்றம் கோரியுள்ளது.

குறிப்பாக, கோவிலில் நடைபெறும் வருவாய் தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன என்பதையும் நீதிமன்றம் அறிய விரும்புவதாக தெரிவித்தது. பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகைகள் மற்றும் அவற்றின் கணக்கீடு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட துறைகள் முழுமையான அறிக்கையை ஜூன் 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதுவரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவில் டிக்கெட் முறைகேடு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள், அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் கோவில் கண்காணிப்பு முறைகள் குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share