×
 
☰

காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுவன் மாயமாகி, மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுவன் நேற்று மாயமான நிலையில், இன்று பாழடைந்த வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரது மனைவி சந்தியா. இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஏழு வயதில் முத்துச்செல்வம் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், சந்தியா தனது இரண்டு மகள்கள் மற்றும் மகன் முத்துச்செல்வத்துடன் தனியாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

முத்துச்செல்வன், தனியாமங்கலம் அருகே உள்ள வெள்ளலூரில் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால், காலை 11 மணியளவில் வீட்டின் அருகே விளையாடச் சென்றுள்ளார். ஆனால், மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை.

இதையும் படிங்க: காலி பணியிடங்கள்... தமிழக அரசுக்கு டார்க்கெட் நிர்ணயித்த மதுரை ஐகோர்ட் கிளை... பரபரப்பு உத்தரவு...!

இதனால் பதற்றமடைந்த தாய் சந்தியா, உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து சிறுவனைத் தேடியுள்ளார். நீண்ட நேரம் தேடியும் சிறுவன் கிடைக்காததால், நேற்று இரவு அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று 20-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் முத்துச்செல்வன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் மேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் தற்செயலாகப் பாழடைந்த வீட்டிற்குள் சென்று விபத்தில் சிக்கினாரா அல்லது யாரேனும் அவரைக் கடத்திக் கொலை செய்தார்களா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பின்னரே சிறுவனின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுவன் மாயமாகி, மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பூதாகரமாகும் மதுரை மாநகராட்சி ஊழல்...! முன்னாள் மண்டல தலைவரின் கணவர் அதிரடி அரெஸ்ட்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share