×
 

அதிகாலையில் நடந்த அதிபயங்கரம்... ஸ்பாட்டிலேயே 6 பேர் உடல் நசுங்கி பலி... 50 பேரின் நிலை என்ன?

மதுரையில் ஆம்னி பேருந்தும் அரசு பேருந்தும் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக மதுரை சரக டிஐஜி சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மேலூர் அருகே அரசு பேருந்தின் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய இந்த விபத்தில், பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், இரு பேருந்துகளிலும் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வஞ்சி நகர் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில், இன்று அதிகாலை சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சுமார் 40 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, சாலையின் நடுப்பகுதியில் இருந்த தடுப்புச் சுவரை (சென்டர் மீடியன்) தாண்டி, எதிர்திசையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதையும் படிங்க: வந்தாச்சு புது பஸ்..! ஒரே வீடியோ தான்... நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு..! மாணவர்கள் செம குஷி..!!

இந்த மோதலின் தாக்கத்தில், அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. அந்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட 48 பேர் பயணம் செய்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தில், ஆனந்தராஜ், சூர்யா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது யாசின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதற்கிடையில், அரசு பேருந்தின் மீது மோதிய ஆம்னி பேருந்து, பின்னர் சாலையோரத்தில் இருந்த பயணிகள் நிழற்குடையிலும் மோதி பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் நிழற்குடை முழுமையாக சேதமடைந்ததுடன், ஆம்னி பேருந்தின் முன்பகுதியும் முற்றிலும் நொறுங்கியது.

ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த புஷ்பம் மற்றும் ஆபிரகாம் ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், கொட்டாம்பட்டி மற்றும் மேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், மேலூர் காவல் துறையினர், சிவகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மருத்துவக் குழுவினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை சரக டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், காயமடைந்தவர்களை விரைந்து சிகிச்சைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ரயில்வே காவலராக பணியாற்றி வந்த சூர்யா என்பது தெரியவந்துள்ளது. மேலும், காயமடைந்து மேலூர் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணன் நேரில் சந்தித்து, அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததுடன், விபத்து தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி... 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share