சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!
மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது ‘துக்ளக் தர்பார்’ போல் உள்ளதாகவும், ஆட்சி மாற்றம் ஒன்றுதான் தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சொக்கலிங்கம் நகர் பகுதியில், சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேவர் ப்ளாக் சாலை அமைக்கும் பணிக்கானப் பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசு மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
செல்லூர் ராஜு பேசுகையில், மதுரை மாநகராட்சியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. சுமார் 2.57 லட்சம் வீடுகளுக்குத் தண்ணீர் வழங்கிவிட்டதாக முதல்வரிடம் தவறானப் புள்ளிவிவரங்களை அதிகாரிகள் கொடுத்துள்ளனர். மாநகராட்சியில் ஒரு மேயரைக்கூட முறையாக நியமிக்க முடியாதச் சூழல் நிலவுகிறது. மேயர் இல்லாமல் துணை மேயரை வைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்; இது துக்ளக் தர்பார் ஆட்சி போல் உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கே இவர்கள் மீது நம்பிக்கை இல்லை என சாடினார்.
இதையும் படிங்க: கூட்டணி கணக்குகள் தீவிரம்! பியூஷ் கோயலை சந்திக்கிறார் அன்புமணி!
தொடர்ந்து கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், ஆட்சியில் பங்கு தருவது ஒத்து வராது என்று முதல்வர் சொல்கிறார். அதை அவரிடம் கேட்ட காங்கிரஸ் கட்சியிடமே அவர் நேரடியாகச் சொல்லி இருக்க வேண்டியதுதானே? இதில் என்ன ஒளிவுமறைவு வேண்டிக்கிடக்கிறது? திமுக அரசு தொடர்ந்தால் தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என முதல்வர் சொல்கிறார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான். ஆனால் மக்கள் அப்படி நினைக்கவில்லை. மோடி மற்றும் அமித்ஷாவின் வருகை, கூட்டணி கட்சிகளுக்கு மக்களிடம் பெருகி வரும் ஆதரவைப் பார்த்து முதல்வர் பயந்துவிட்டார். வடிவேலு திரைப்படத்தில் சுடுகாட்டில் அமர்ந்து புலம்புவது போல ஐயோ என்னை தவிக்க விட்டார்களே என்று முதல்வர் புலம்புகிறார் எனக் கிண்டல் செய்தார்.
மேலும், மதுவிலக்கு மற்றும் தலித் பெண்கள் மீதானத் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், கடந்த தேர்தலில் ஒரு சொட்டு மது இருக்காது என வாக்குறுதி அளித்தனர். ஆனால் இன்று இளம் விதவைகள் பெருகிவிட்டனர். இதனைத் திருமாவளவனும், கனிமொழியும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? அனைத்து வியாதிகளுக்கும் ஒரே ஒரு மாத்திரை தீர்வு என்பது போல, தமிழ்நாட்டிற்கு ஆட்சி மாற்றம் ஒன்றுதான் முழுமையானத் தீர்வு என தெரிவித்தார். இறுதியாகச் சசிகலா தனிக்கட்சித் தொடங்குவது குறித்தக் கேள்விக்கு பதில் ஏதும் அளிக்காமல் அவர் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: "அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...!