×
 

திமுக இளைஞரணியில் புறக்கணிக்கப்படும் வட்ட செயலாளர்கள்!! தவெக பக்கம் திரும்பும் ரூட்! அப்செட்டில் உதயநிதி!

மதுரையில் தி.மு.க., இளைஞரணியில் நிர்வாகிகள் நியமனத்தில் வட்டச் செயலாளர்கள் (வ.செ.,) சிபாரிசு புறக்கணிக்கப்பட்டதால் பதவி கிடைக்காத இளைஞர்கள் 'ரூட்'டை மாற்றி த.வெ.க., உடன் 'டீலிங்' பேச துவங்கியுள்ளனர்.

மதுரை: தமிழகத்தில் ஆளும் திமுகவின் இளைஞரணி மறுசீரமைப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் வாரியாக கிளை, வட்டம், பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மதுரை நகர், வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கான இளைஞரணி நிர்வாகிகள் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.

குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள 100 வார்டுகளுக்கும் இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் தலா 5 துணை அமைப்பாளர்கள், பகுதி அமைப்பாளர்கள் என பல்வேறு பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இப்பட்டியலில் பெரும்பாலான வட்டச் செயலாளர்களின் சிபாரிசுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதற்கு பதிலாக மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோருக்கு நெருக்கமானவர்களும், அவர்களது உறவினர்களும் பொறுப்புகளைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: தியாக பெருவாழ்வு... நல்லக்கண்ணுவின் 101வது பிறந்தநாள்... முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து மழை...!

இதனால் திமுகவின் வட்டம் மற்றும் பகுதி செயலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பதவி கிடைக்காத இளைஞர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

அதிருப்தி அடைந்த வட்டச் செயலாளர்கள் கூறுகையில், “கட்சியின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை களத்தில் நிறைவேற்றுவது வட்டச் செயலாளர்கள்தான். மாவட்ட செயலாளர்களின் உத்தரவுகளை நாங்களே நேரடியாக செயல்படுத்துகிறோம். ஆனால் எங்களது சிபாரிசுகள் மதிக்கப்படுவதில்லை” என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், “வார்டு இளைஞரணியில் நாங்கள் சிபாரிசு செய்தவர்கள் பொறுப்பில் இருந்தால்தான் தேர்தல் பணிகளை எளிதாக செய்ய முடியும். தற்போது மாநகராட்சி கவுன்சிலர்களின் செல்வாக்கே ஓங்கியுள்ளது. இதனால் எங்கள் சிபாரிசு செய்த இளைஞர்கள் பலர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு (தவெக) மாறி வருகின்றனர். 

தற்போது அரசியல் கட்சிகளில் இளைஞர்களுக்கு அதிக ‘டிமாண்ட்’ உள்ளது. அதிமுகவில் பொறுப்பு கிடைப்பது கடினம் என்பதால் தவெகவுக்கு ரூட்டை மாற்றுகின்றனர். அங்கு விரைவாக பொறுப்புகளைப் பெற வாய்ப்பு அதிகம் உள்ளது” என்று தெரிவித்தனர்.

திமுக தலைமை இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, இளைஞர்களை கட்சிக்குள் தக்க வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மாநகராட்சி பகுதியில் இளைஞரணி நியமனம் தொடர்பான அதிருப்தி, வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சிக்கு சவாலாக அமையலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: நாட்டைப் பிளவுபடுத்தி குளிர்காயும் கலவர கும்பல்... அடக்கணும்...! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share