"ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!
இணையதளங்களில் முகவரி மற்றும் கைபேசி எண்களை பகிரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் வீரமணி சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனக்கு ஒரு ஸ்வீட் டப்பா அனுப்பி வைக்குமாறு தனது பின்தொடர்பவர்களிடம் கேட்டுக்கொண்டார். அதற்காக தனது வீட்டு முகவரியையும் தொலைபேசி எண்ணையும் வீடியோவில் வெளியிட்டார். ஆனால் அந்த எளிய கோரிக்கை அவருக்கு பெரும் தொல்லையாக மாறியது.
அவரது முகவரியைப் பயன்படுத்தி சிலர் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்யத் தொடங்கினர். ஒரு டிவி ஆர்டர் மட்டும் ரூ.1.69 லட்சம் மதிப்புடையதாக இருந்தது. ஃபுட் டெலிவரிகளும் தொடர்ந்து வீட்டு வாசலில் வந்து குவிந்தன. சிலர் ஜேசிபி, பீரங்கி போன்றவற்றைக் கூட ஆர்டர் செய்ததாக ஆன்லைனில் பதிவுகள் வெளியிட்டனர். டெலிவரி நபர்கள் அடிக்கடி வீட்டுக்கு வரத் தொடங்கியதால் வீரமணி பெரும் மன அழுத்தத்திற்கு ஆளானார்.
அவர் வீடியோக்கள் வெளியிட்டு “தயவுசெய்து ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள். என்னால் தாங்க முடியவில்லை” எனக் கெஞ்சினார். இருந்தும் தொல்லை ஓயவில்லை. இறுதியில் அவர் வீட்டைக் காலி செய்து வேறு இடத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அவரது குடும்பத்தினரும் இதனால் பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை எடுத்துக்காட்டாகக் காட்டி தமிழ்நாடு காவல்துறை சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது. “நண்பர்களே தயவுசெய்து யாரும் உங்களது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர வேண்டாம்” என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிச்சு நொறுக்கப் போகுது..! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! வானிலை அப்டேட்.!
தனிப்பட்ட முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை எளிதில் வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துகளை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இணைய உலகில் விளையாட்டாகத் தொடங்கும் விஷயங்கள் பெரும் இன்னலை விளைவிக்கும் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்தியுள்ளது. தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு வலியுறுத்துகிறது
இதையும் படிங்க: ஆந்திராவில் முதல்வர் விஜய்... பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அதிகாரிகள்..! பெரும் எதிர்பார்ப்பு..!!