மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!
கும்பாபிஷேகத்தையொட்டி தற்காலிகமாக உணவுக்கடைகள் மற்றும் குளிர்பானக் கடைகள் அமைப்பவர்களும் உரிய பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இலவசமாக வழங்குபவர்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உணவு வழங்குபவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து சான்றிதழ் பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகள், மாரட் வீதிகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் அன்னதானம், பிரசாதம், நீர்மோர், இனிப்பு, சர்பத், குளிர்பானம் உள்ளிட்டவற்றை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இதற்காக உணவுப் பாதுகாப்புத்துறையின் foscos.fssai.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, ரூ.100 கட்டணம் செலுத்தி பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என மதுரை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராமபாண்டியன் தெரிவித்துள்ளார். ஒருமுறை பெறப்படும் இந்தச் சான்றிதழ் ஓராண்டு வரை செல்லுபடியாகும்.
இதையும் படிங்க: “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!
பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக் கூடாது என்றும், அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கும்போது அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை சரிபார்க்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது மதுரை மற்றும் அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கிய 626 பேர் பதிவுச் சான்றிதழ் பெற்றுள்ளனர். அந்தச் சான்றிதழ் ஓராண்டுக்கு செல்லுபடியாகும் என்பதால், தற்போது அன்னதானம் வழங்க திட்டமிடுபவர்கள் தங்களது சான்றிதழ் இன்னும் செல்லுபடியாகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
கும்பாபிஷேகத்தையொட்டி தற்காலிகமாக உணவுக்கடைகள் மற்றும் குளிர்பானக் கடைகள் அமைப்பவர்களும் உரிய பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு 0452-2640036 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கிடையே, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும், பல்வேறு துறைகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கும்பாபிஷேகத்துக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் உணவின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!