மீனாட்சியம்மன் கும்பாபிஷேகம்: எதற்கொல்லாம் தடை விதிப்பு?... அதிரடி கட்டுப்பாடுகள் என்னென்ன?
மின்சாரக் கம்பிகளின் வழித்தடம், கட்டிடங்களின் உறுதித்தன்மை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, கோவிலைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் மேற்கூரைகளில் பொதுமக்கள் ஏற மாநகராட்சி தடைவிதித்துள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கட்டிட மேற்கூரைகளில் ஏறத் தடை:
கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை, ஆவணி மூல, மாசி வீதிகளில் உள்ள கட்டிடங்களின் மேற்கூரைகளில் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக பொதுமக்கள் ஏற அனுமதி இல்லை. கட்டிடங்களின் உறுதித்தன்மை, மின்சாரக் கம்பிகள் மற்றும் கூட்ட நெரிசலால் ஏற்படும் ஆபத்துகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏற்பாடுகள்:
கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதால், கூட்ட நெரிசலைக் கண்காணிக்க CCTV கேமராக்கள் உள்ளிட்ட கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பும் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தத்தில் கட்டுப்பாடு:
கோவிலைச் சுற்றியுள்ள பகுதியில் நேரடியாக வாகனங்களை நிறுத்துவதற்கு பதிலாக, 58 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவில் சுற்றுவட்டாரத்தில் வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அறநிலையத்துறை விதித்துள்ள நிபந்தனைகள்:
கும்பாபிஷேகத்தை நடத்த அறநிலையத்துறை சார்பில் 12 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை:
- கும்பாபிஷேகத்திற்காக பக்தர்களிடம் தனியாக நன்கொடை வசூலிக்கக் கூடாது.
- கோவில் நிதியை கும்பாபிஷேகத்திற்காக பயன்படுத்தக் கூடாது.
- கும்பாபிஷேகப் பணிகளை உபயமாக செய்து கொள்ளலாம்.
- உபயதாரர்களுக்கு இதன் காரணமாக எந்தவித முன்னுரிமையும் வழங்கக் கூடாது.
- யாகசாலை, பந்தல் உள்ளிட்ட தற்காலிக கட்டமைப்புகள் பாதுகாப்பான முறையில், தகரக் கூரை உள்ளிட்ட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட வேண்டும்.
- மின் இணைப்புகள் மற்றும் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து உரிய பாதுகாப்புச் சான்றிதழ்கள் பெற வேண்டும்.
- பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
- தேவைப்பட்டால் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு காப்பீட்டு வசதி ஏற்படுத்த வேண்டும்.