மதுரை குலுங்க குலுங்க... களைகட்டும் சித்திரை திருவிழா... இன்று மீனாட்சி திருக்கல்யாணம்...!
சுமங்கலிப் பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். அந்த நேரத்தில் இயலாதவர்கள் காலை 10.35 முதல் 11.30 வரையிலான நேரத்தில் மாற்றலாம்.
மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 26-ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்று, அடுத்த நான்கு மாதங்களுக்கு அவரே மதுரையின் அரசியாக ஆள்வதாக ஐதீகம். அதன் பிறகு சிவபெருமான் ஆட்சி செய்வார்.
பட்டாபிஷேகத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 27 ஆம் தேதியான இன்று மீனாட்சி திக்கு விஜயமும், விழாவின் 10வது நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் நடக்கவுள்ளது. திருமணத்தை நடத்த அழகர்மலையில் இருந்து கள்ளழகர் வர தாமதமானதால், திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்ரமணிய சுவாமியும் பவளக்கனிவாய் பெருமாளும் வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம்.
மீனாட்சி திருக்கல்யாணம் இன்று காலை 08.35 மணி முதல் 08.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் நடைபெறும். இதற்காக திருக்கல்யாண மேடை வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால் கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் சுமங்கலிப் பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். அந்த நேரத்தில் இயலாதவர்கள் காலை 10.35 முதல் 11.30 வரையிலான நேரத்தில் மாற்றலாம்.
இதையும் படிங்க: பட்டு வேஷ்டி சட்டையில் நள்ளிரவில் மதுரை வந்த விஜய்... அதிகாலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு...!
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் போது, மதுரையின் திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யக் கயிற்றைப் புதிதாக மாற்றிக் கொள்வார்கள். அன்னைக்குத் தாலி கட்டப்படும் அதே நேரத்தில், ஊரே தாலி மாற்றும் நிகழ்வு 'மாங்கல்ய பலம்' தரும் என்பது ஐதீகம்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால், 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீய அணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை விருந்து நடைபெறும். இன்று காலை முதல் மாலை வரை சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து வழங்கப்படும். காலை டிபனாக பொங்கல், இட்லி, கிச்சடி வடையும், மதிய விருந்தில் தயிர், தக்காளி, சாம்பார், வெஜ்டேபிள் பிரியாணி உள்ளிட்ட 6 வகையான சாதங்களும் பரிமாறப்படவுள்ளது. 7 ஆயிரம் கிலோ அரிசி மூலம் 1.5 லட்சம் பக்தர்களுக்கு மேல் உணவு தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!