மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!
17-வது நாளில் குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் காவல்துறையிடம் சம்மதக் கடிதம் அளித்தனர்
மதுரை: மதுரை ஆனையூர் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வனின் உடல், 16 நாட்களுக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. மாணவனின் மரணம் தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி, அப்பகுதியில் உள்ள முட்புதர் நிறைந்த நீர்நிலை பகுதியில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து கூடல்புதூர் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்து, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும், சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ‘தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டு இயக்கம்’ சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!
இந்த நிலையில், 17-வது நாளில் குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் காவல்துறையிடம் சம்மதக் கடிதம் அளித்தனர். இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலைப் பெற்ற பிறகு, உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மருத்துவமனையிலிருந்து வைகை ஆறு தரைப்பாலம் வரை ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் தமிழ்ச்செல்வனின் உடல் அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் குச்சிலியம்பாறை அருகேயுள்ள பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
‘தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டு இயக்கம்’ தரப்பில் மகாலட்சுமி கூறுகையில், போலீஸ் விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக தெரிவித்தார். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்ற நம்பிக்கையிலும், குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் உடலை பெற்றதாக அவர் கூறினார். உடலை பெற்றுக்கொண்டாலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!