மதுரைக்கு புத்தம் புது இறக்கை!! வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்!
மதுரை மேலமடை அப்பல்லோ சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(டிச. 7) திறந்து வைத்தார்!
மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மேலமடை அப்பல்லோ சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள “வீரமங்கை வேலுநாச்சியார் உயர்மட்ட மேம்பாலம்” இன்று (டிசம்பர் 7) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த 1,100 மீட்டர் நீளமுள்ள பாலம், மதுரையின் போக்குவரத்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
அண்ணாநகர், மாட்டுத்தாவணி, ஆவின் பாலகம், பாண்டி கோவில், கே.கே.நகர், அரசு மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை, அண்ணா பேருந்து நிலையம் என மதுரையின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் இந்தச் சந்திப்பு, அதிக மருத்துவமனைகள், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள் இருப்பதால் எப்போதும் பயங்கர நெரிசலில் சிக்கித் தவித்து வந்தது.
பள்ளி-கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், நோயாளிகள் என அனைவரும் குறித்த நேரத்தில் சென்றடைய முடியாமல் தினமும் அவதிப்பட்டனர். குறுகிய சாலை, அடிக்கடி நடக்கும் விபத்துகள், உயிரிழப்புகள் என மக்கள் பல ஆண்டுகளாக உயர்மட்டப் பாலம் கேட்டு போராடினர்.
இதையும் படிங்க: கோவை, மதுரைக்கு மெட்ரோ கிடையாதா? கைவிரிக்கும் மத்திய அரசு!! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!
இந்தக் கோரிக்கையை ஏற்ற திமுக அரசு, 2023 அக்டோபர் 30-ம் தேதி முதல்வர் ஸ்டாலினே அடிக்கல் நாட்டினார். 28 தூண்கள் கொண்ட இந்தப் பாலம் வெறும் 26 மாதங்களில் முழுமையாக நிறைவடைந்து, இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இனி சிவகங்கை, திருச்சி, சென்னை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட திசைகளில் இருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் நேரடியாகச் செல்ல முடியும். அதேபோல் மதுரை மையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்களும் நெரிசல் இன்றி பறக்கும்.
இதனால் ஒரு மணி நேரம் வரை செலவழித்த பயண நேரம் இனி 5 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்தப் பாலம் உயிர்காக்கும் வரப்பிரசாதமாக அமையும்.
தமிழகத்தின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனையான வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை இந்தப் பாலத்திற்கு சூட்டியது மதுரை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “மதுரையின் போக்குவரத்து தலைவலிக்கு முடிவு கட்டிய முதல்வருக்கு நன்றி” என மக்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை!! டிச., 12 வரை மழை தொடரும்!! வானிலை அப்டேட்!