×
 

மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

மதுராந்தகம் அருகே நடுபழனி முருகன் கோயிலில் கொள்ளை போன மரகத மூலவர் சிலையை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தை அடுத்த பெருங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நடுபழனி முருகன் கோவில் கருவறைப் பூட்டை உடைத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான விலைமதிக்க முடியாத மரகத பாலதண்டாயுதபாணி மூலவர் சிலையைத் திருடிச் சென்ற கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 3 பேரைத் தனிப்படை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மேலும், கொள்ளையர்களால் கல்குவாரிக் குட்டைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மரகதச் சிலையும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள வடபழனி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு நடுவே அமைந்திருப்பதால், முருக பக்தர்களால் 'நடுபழனி' என்று பயபக்தியுடன் அழைக்கப்படும் கனக மலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், விசேஷ மற்றும் திருவிழாக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இந்தச் சூழலில், கடந்த 1-ஆம் தேதி இரவு வழக்கமான பூஜைகள் முடிந்து அர்ச்சகர்கள் நடைசாத்திவிட்டுச் சென்ற நிலையில், மறுநாள் அதிகாலை நடை திறக்கப்பட்டபோது கருவறையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புமிக்க மரகதக் கல்லாலான பாலதண்டாயுதபாணி சுவாமி மூலவர் சிலை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சித்தாமூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மற்றும் தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் தீவிர வேட்டையில் இறங்கினர். இதில், சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கோவிலில் நள்ளிரவு புகுந்து மரகத முருகன் சிலையைத் தாங்களே திட்டமிட்டுக் கொள்ளையடித்ததை அந்த மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர். மேலும், திருடப்பட்ட மரகதச் சிலையை யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்யும் வரை தற்காலிகமாகப் பதுக்கி வைக்கும் நோக்கில், கோவிலுக்கு அருகேயுள்ள புத்தூர் பகுதியில் செயல்படாமல் கைவிடப்பட்டிருந்த பாழடைந்த கல்குவாரி நீர்க் குட்டைக்குள் வீசி மறைத்து வைத்திருந்த அதிர்ச்சித் தகவலையும் அவர்கள் வாக்குமூலமாக அளித்தனர்.

இதனையடுத்து, கொள்ளையர்கள் அடையாளம் காட்டிய கல்குவாரிக் குட்டைக்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர், தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத பாலதண்டாயுதபாணி சிலையை மிக லாவகமாக மீட்டெடுத்தனர். மீட்கப்பட்ட புனித மரகதச் சிலை, செய்யூர் வட்டாட்சியர் முன்னிலையில் முறைப்படி சரிபார்க்கப்பட்டு அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. இக்கொள்ளைச் சம்பவத்தில் கைதான மூன்று பேரிடமும் பன்னாட்டுச் சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கொள்ளை போன தங்களது காவல் தெய்வத்தின் மரகதச் சிலை மீட்கப்பட்டதால் அப்பகுதி கிராம மக்களும் முருக பக்தர்களும் எல்லையற்ற மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share