மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை எட்ட நாளை (அக். 6) பொது விடுமுறை மற்றும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (அக்டோபர் 6) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் தங்களது ஜனநாயகக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் நோக்கில், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நாளை அரசுப் பொது விடுமுறை (Public Holiday) நாளாக அறிவித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருமான சினேகா உத்தரவிட்டுள்ளார்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தங்களது பணி நிமித்தமாக வாக்கு செலுத்துவதைத் தவிர்த்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களிலும் பிற பகுதிகளிலும் பணிபுரிந்து வரும் மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை (Paid Holiday) வழங்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் பணியிடங்கள் வேறு பகுதிகளில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நேரில் சென்று தங்களது வாக்குரிமையைத் தவறாமல் செலுத்துவதற்கான முழு வாய்ப்பும் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!
மேலும், மதுராந்தகம் சட்டமன்றத் தனித் தொகுதிக்குட்பட்ட எல்லைப் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்துத் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், அரசு தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் வாக்குப்பதிவு நாளான நாளை (அக். 6) முழுமையாகச் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி அமைதியான முறையில் வாக்களிக்க அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன; ஜனநாயகத் திருவிழாவில் அனைத்துத் தரப்பு மக்களும் முழுமையாகப் பங்கேற்று 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என மாவட்ட தேர்தல் நிர்வாகம் பொதுமக்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: நாளை மதுராந்தகத்தில் களமிறங்கும் விஜய்..!! பிரம்மாண்ட ரோடு ஷோ.. தவெக வேட்பாளருக்கு ஆதரவு!!