×
 

விடிந்ததுமே குட்நியூஸ்...!! - சென்னை ட்ராபிக் இனி பாதியாக குறையப்போகுது... டெல்லியில் இருந்து பறந்த வந்த உத்தரவு...!

மதுரவாயில் – சென்னை துறைமுகம் இரடுக்கு மேம்பாலத் திட்டத்தை 2027-க்குள் விரைந்து நிறைவு செய்யுமாறு ஒப்பந்ததாரருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், மதுரவாயில் – சென்னை துறைமுகம் இரடுக்கு மேம்பாலத் திட்டத்தை 2027-க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்தத் திட்டத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சரக்கு போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த இரடுக்கு மேம்பாலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், பல்வேறு காரணங்களால் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை..!! அதிரடி சோதனை..!! பரபரப்பான சென்னை..!!

குறிப்பாக, கூவம் நதியின் நடுப்பகுதியில் 600-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் பெய்த பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்தப் பணிகள் பாதிக்கப்பட்டதால் திட்ட முன்னேற்றத்தில் தாமதம் ஏற்பட்டது.

21 கிலோமீட்டர் நீளமுடைய இந்த மேம்பாலத் திட்டத்தில், 13 இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வசதிகள் அமைக்கப்படவுள்ளன. சென்னை துறைமுகத்தின் நான்காவது நுழைவாயிலில் தொடங்கி, கூவம் நதி வழியாக சிவானந்த சாலை, கல்லூரி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு வழியாக மதுரவாயிலை சென்றடையும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலடுக்கில் கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும், கீழடுக்கில் உள்ளூர் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படும் வகையிலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, தினசரி சுமார் 20 ஆயிரம் உள்ளூர் வாகனங்களையும், 5,500 கனரக வாகனங்களையும் கையாளும் திறன் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2047-ஆம் ஆண்டிற்குள் தினசரி உள்ளூர் வாகனப் பயன்பாடு 52 ஆயிரமாக அதிகரிக்கும் என்றும், சென்னை துறைமுகத்தின் ஆண்டுதோறும் சரக்குகளை கையாளும் திறன் 20 கோடி டன்னாக உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, 2027-க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ஒப்பந்ததாரருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் ரூ.5,800 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த இரடுக்கு மேம்பாலத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜே.குமார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நான்கு தொகுப்புகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து ஒப்பந்தம் பெற்று மேற்கொண்டு வருகிறது.

இந்த நான்கு தொகுப்புகளில் இதுவரை எத்தனை சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன, எந்த பகுதிகளில் இன்னும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது, மீதமுள்ள பணிகளை எவ்வளவு காலத்திற்குள் முடிக்க முடியும் என்பது தொடர்பான விரிவான அறிக்கையையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: "சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8 வழிச்சாலை? ECR-க்கு புதிய முகம்! மத்திய அரசிடம் தமிழகத்தின் புதிய கோரிக்கை!"

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share