மகளிர் உரிமைத்தொகைக்காக இத்தனை லட்ச விண்ணப்பங்களா..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
மகளிர் உரிமைத்தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூலை 15ம் தேத அன்று கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசு சேவைகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய முயற்சியாகும். இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 15 துறைகளை உள்ளடக்கிய 46 அரசு சேவைகள் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மின்சார இணைப்பு மாற்றம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சேவைகளை மக்கள் எளிதாகப் பெறலாம்.
இத்திட்டத்தில் மக்களிடம் பெறப்படும் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று மக்களுக்கு முகாம்களின் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதற்காக https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டு, முகாம்களின் தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகையில் மிகப்பெரிய மோசடி அம்பலம்.. மராட்டிய து.முதல்வர் சொன்ன விஷயம்..!!
மக்களின் வசதிக்காக கிராமப்புறங்களில் 46 சேவைகளும், நகர்ப்புறங்களில் 43 சேவைகளும் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் முந்தைய மூன்று கட்டங்களின் கருத்துகளின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு, தேர்தல் நடவடிக்கையாக இல்லாமல், மக்களின் உண்மையான தேவைகளை நிறைவேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரசின் முதன்மையான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1,000 வழங்கப்படும் உரிமைத் தொகைக்காக இதுவரை 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு பொருளாதார ஆதரவு வழங்குவதோடு, பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளித்து, சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கிறது. 2023 செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், தற்போது 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். முதல் கட்டமாக 1.63 கோடி விண்ணப்பங்களில் 1.06 கோடி பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், மேல்முறையீடு மூலம் 9 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்.
தகுதியானவர்கள் விடுபடாமல் பயனடைய, புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. 21 வயது பூர்த்தியடைந்த, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, மின்சார நுகர்வு, நில உரிமை போன்றவை தகுதி அளவுகோல்களாக உள்ளன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையங்கள் வழியாக மேல்முறையீடு செய்யலாம். புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு, விண்ணப்ப செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் முன்மாதிரியாக உள்ளது.
இத்திட்டத்தால் பெண்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு, பொருளாதார சுதந்திரம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் பயனாளர்கள் எண்ணிக்கை மேலும் விரிவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அழிவின் விளிம்பில் இருவாச்சி பறவைகள்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு..!!