அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
மைத்ரேயன் தனது அரசியல் பயணத்தை 1991ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தொடங்கினார். பாஜகவில் இணைந்த அவர், மாநில செயற்குழு உறுப்பினராகவும், மாநில அறிஞர் அணி தலைவராகவும், பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
1999ஆம் ஆண்டு வரை பாஜகவில் இருந்த அவர், பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்த பிறகு, மைத்ரேயன் 2001ஆம் ஆண்டு சென்னை மைலாப்பூர் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் லட்சுமணனிடம் தோல்வியடைந்தார். இருப்பினும், 2002ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: இபிஎஸ்-ன் சூறாவளி சுற்றுப்பயணம்! எந்தெந்த ஊருக்கு போறாரு தெரியுமா? 3ம் கட்ட பிரச்சாரத்தின் முழு விவரம்..!
தொடர்ந்து மூன்று முறை (2002-2014) மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். ஜெயலலிதாவின் ஆட்சியில் அவர் முக்கிய பொறுப்புகளை வகித்தார், குறிப்பாக டெல்லியில் அதிமுகவின் நிகழ்வுகளை கவனித்து, கட்சியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக அறியப்பட்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் தோன்றின. இதில் மைத்ரேயன் ஆரம்பத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) "தர்மயுத்தம்" அணியில் இணைந்தார். பின்னர், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அணிக்கு மாறினார்.
ஆனால், 2022ஆம் ஆண்டு ஓபிஎஸ்-ஐ மீண்டும் சந்தித்ததற்காக எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மைத்ரேயன் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும், பாஜகவில் அவருக்கு எதிர்பார்த்த பொறுப்புகளோ, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மைத்ரேயன், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் மைத்ரேயன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.
இதையும் படிங்க: இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்.. திமுக கவுன்சிலர் கைது.. இதுதான் ஸ்டாலின் தந்த விடியலா? அதிமுக கடும் விமர்சனம்..!