மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கோர விபத்து: அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்!
மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முந்திச் செல்ல முயன்றபோது அரசுப் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு வாகனங்களும் தலைகீழாகக் கவிழ்ந்தன. இந்த கோர சம்பவத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் நிகழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றும், அதே திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்றும் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மற்றும் கார் ஆகிய இரண்டுமே நெடுஞ்சாலையிலேயே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ‘நெடுஞ்சாலை ரோந்து’ போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாகத் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கிரேன் வரவழைக்கப்பட்டு வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே போக்குவரத்து சீரானது.
அதிர்ச்சியூட்டும் தகவலாக, நேற்று இதே பகுதியில் இருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் அரசுப் பேருந்து ஒன்றின் டயர் வெடித்துத் தலைகீழாகக் கவிழ்ந்ததில் 20 பேர் காயமடைந்திருந்தனர். தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக ஒரே பகுதியில் விபத்து நடக்கிறது. இந்த விபத்துகள் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் வடிவமைப்பு அல்லது அதிக வேகம் இந்த விபத்துகளுக்குக் காரணமா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதிகளில் வேகத்தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்பெயினில் கோர சம்பவம்..!! தடம் புரண்ட ரயில்..!! பலி எண்ணிக்கை 21-ஆக உயர்வு..!!
இதையும் படிங்க: “சித்ரா ஐயரின் இல்லத்தில் சோகம்!” பாடகியின் சகோதரி ஓமனில் விபத்தில் காலமானார்!