×
 

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய ஆலோசனை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் பாஜக மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் எல். முருகன் ஆகியோர் சென்னையில் இன்று நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற முக்கியமான அரசியல் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் அனலைக் கிளப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. மதியம் 2:50 மணியளவில் தொடங்கிய இந்த ஆலோசனையில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தற்போதுள்ள கட்சிகளுடன், மேலும் சில புதிய கட்சிகளை இணைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறமையின்மை குறித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய பிரசார யுக்திகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், கூட்டணிக்குள் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் சிறுசிறு சங்கடங்களைத் தீர்ப்பது குறித்தும் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் தனித்தனியாக திமுக அரசை விமர்சித்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற இந்த நேரடிச் சந்திப்பு, வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நாளை (பிப். 17) முதல் பாஜக தனது 12 நாள் தெருமுனைப் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, மதுரையில் புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி பெயர் சூட்ட முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவை அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே உன்னிப்பாகக் கவனித்து வரும் சூழலில், இந்தத் தலைவர்களின் சந்திப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share