பட்டம் விடும் திருவிழா 2026: வானில் பறந்த கலர் கலர் பட்டங்கள்.. களைகட்டும் மாமல்லபுரம்..!!
கடற்கரைக் காற்று சாதகமாக வீசியதால், சுமார் 200-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ராட்சத பட்டங்கள் மாமல்லபுரம் வானில் வண்ணமயமாகப் பறந்தன.
மாமல்லபுரத்தின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓசன் வியூ மைதானத்தில், ஐந்தாவது தமிழ்நாடு சர்வதேச பட்டம் விடும் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. சுதந்திர தின வார இறுதியை முன்னிட்டு ஆகஸ்ட் 14 முதல் 16 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா, குடும்பங்களுக்கான இலவச கொண்டாட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் பங்கேற்று விழாவைத் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் டிடிடிசி மேலாண்மை இயக்குநர் டாக்டர் வி.பி. ஜெயசீலன், திருப்போரூர் எம்.எல்.ஏ. பா. விஜயராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ். சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. அமைச்சர், வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த பட்டம் பறக்கவிடும் நிபுணர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
இந்தியாவின் தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 30-க்கும் அதிகமான சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர். கடற்கரைக் காற்று சாதகமாக அமைந்ததால் சுமார் 200-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட பட்டங்கள் வானில் பறந்தன.
இதையும் படிங்க: சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?
ஆக்டோபஸ், டால்பின், ஆமை, டிராகன், ஷார்க், சூப்பர்மேன், மிக்கி மவுஸ், லாபுபு போன்ற வடிவங்களில் காற்று நிரப்பப்பட்ட பட்டங்கள் குழந்தைகளையும் பொதுமக்களையும் கவர்ந்தன. தமிழ்நாட்டின் ஸ்கைட்டர்ஸ் குழுவினர் விருது பெற்ற பொய்க்கால் குதிரை மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வடிவ பட்டங்களைப் பறக்கவிட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்தினர். மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட பட்டங்கள் இரவை ஒளிமயமாக்கின.
விழாவில் கடற்கரை உணவு அரங்குகள், கைவினைப் பொருட்கள் சந்தை, குழந்தைகள் புகைப்படப் பகுதிகள் மற்றும் ஆகஸ்ட் 16-ல் மட்டும் ரெட் புல் ஃபார்முலா-1 கார் மாதிரி காட்சிப்படுத்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வருகை தருவதால் காவல்துறை பலத்த பாதுகாப்பு அளித்துள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து சீராக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 3 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரை பட்டம் காட்சிகள் நடைபெறும். இந்த விழா மாமல்லபுரத்தை மேலும் சுற்றுலா மையமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 1! முதல்வர் விஜய் உடன் ராகுல்காந்தி சந்திப்பு?! அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு!