கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!
கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு லஞ்சம் வாங்கினார்கள் என்ற சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒரு பரபரப்பான தருணம் உருவானது. நிதி அமைச்சர் மரிய வில்சன், பள்ளிக் கல்வித் துறை தொடர்பான விவாதத்தின் போது கடந்த ஆட்சியைக் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் பேசியபோது, முந்தைய அரசின் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக கட்டாயமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அந்த முறைகேட்டில் தானும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்றும், தனது சொந்தப் பள்ளிக்காகவே பணம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.பேரவையில் பேசிய அமைச்சர், “கடந்த ஆட்சியில் பள்ளிக்கு அனுமதி வழங்குவதற்காக கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். கட்டாயப்படுத்தி பணத்தை வாங்கினார்கள்” என்று நேரடியாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஆவணச் சாட்சிகளைக் காட்டிலும் தானே நேரடிச் சாட்சி என்றும் உறுதியாகப் பேசினார். “பேரவையில் சாட்சி சாட்சி என்று கேட்கிறார்கள். ஆவண சாட்சி வந்துவிட்டுப் போகட்டும். பள்ளிகளில் பணம் வசூலிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் நானே ஒரு சாட்சிதான்” என்ற அவரது வார்த்தைகள் அவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது பேரவையில் இல்லாத நிலையில், அவர் இருந்திருந்தால் நேருக்கு நேர் சொல்லியிருப்பேன் என்று மரிய வில்சன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!
இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசக்கூடாது என முதலில் நினைத்ததாகவும், ஆனால் இனி அதைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தார்.மேலும், “நாளைக்கு வேண்டுமானால் அவர்கள் அவதூறு வழக்கு தொடுக்கட்டும். அல்லது விசாரணைக்கு அழைக்கட்டும். நானே வருகிறேன். அவரை நேரில் சந்திக்கிறேன். எந்த இடத்தில், எவ்வளவு பணம் கொடுத்தோம் என்பதை என்னாலேயே தெளிவாகச் சொல்ல முடியும். இதுதான் சாட்சி” என்று சவால் விட்டார்.
இதையும் படிங்க: அமைச்சரவையில் மரிய வில்சனுக்கு இடமா? பரபரப்பை கிளப்பிய சவுக்கு சங்கர்..!!