×
 

சென்னை மணலி அருகே பயங்கரம்: எண்ணெய் குடோன் வெடித்து சிதறியதால் 6 மணி நேரம் நீடித்த போராட்டம்!

சென்னை மணலி புதுநகர் அருகே தீ விபத்தில் பழைய எண்ணெய் பொருட்கள் குடோன் வெடித்துச் சிதறியது; தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரமாக போராடி தீயை அனைத்தனர்.

சென்னை மணலி புதுநகர் அடுத்த விச்சூர் பகுதியில் உள்ள பழைய எண்ணெய் பொருட்கள் சேமிப்பு குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குடோன் வெடித்துச் சிதறியது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடினர்.

மணலி புதுநகர் அருகே உள்ள விச்சூர் பகுதியில் பழைய ஆயில் மற்றும் ரசாயன எண்ணெய் பொருட்களைச் சேமித்து வைக்கும் தனியார் கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை இந்த குடோனுக்குள் எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கில் எளிதில் தீப்பற்றக்கூடிய பழைய எண்ணெய் பொருட்கள் மற்றும் பேரல்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்ததால், தீ மிக வேகமாக ஒட்டுமொத்த வளாகத்திற்கும் பரவியது. அப்போது குடோனுக்குள் இருந்த ஆயில் பேரல்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதனால் குடோனின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தன.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த மணலி, மாதவரம், திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. ரசாயன எண்ணெய் என்பதால் தண்ணீரை மட்டும் பயன்படுத்தாமல், தீயை அணைக்கப் பிரத்யேக 'ஃபோம்கள்' (Foam) பயன்படுத்தப்பட்டன. விச்சூர் பகுதி முழுவதும் பல கிலோமீட்டர் தூரத்திற்குக் கரும்புகை சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பெரும் அவதிக்குள்ளாகினர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் சுமார் 6 மணி நேரம் தொடர்ச்சியாகப் போராடி, மதியத்திற்கு மேல் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: டெல்லியில் பயங்கரம்! ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பலி!

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய எண்ணெய் பொருட்கள் மற்றும் குடோன் கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்ட நேரத்தில் பணியாளர்கள் யாரும் உள்ளே இல்லாததால் பெரிய அளவிலான உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மேலும் 114 ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா தீவிரம்! 90 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share