ஜெம் வீரமணி வழக்கை கையில் எடுக்கும் அமலாக்கத்துறை... விஷயத்தை மூடி மறைத்த அனைவரும் கூண்டோடு கைது?
ஜெம் வீரமணி வழக்கை கையில் எடுக்கிறதா அமலாக்கத்துறை? – சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க வாய்ப்பு
ஜெம் வீரமணி வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான முகாந்தரம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை முதற்கட்டமாக மத்திய குற்றப்பிரிவு விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது விசாரணை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி தலைமையில் மொத்தம் நான்கு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "உத்தமன் போல் உருட்டிய டம்மி டாடி"..! கேள்வி கேட்டால் பதுங்குவீர்களா.? திமுகவை வெளுத்த தவெக..!!
இந்நிலையில், கடந்த ஆண்டே வீரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பல கோடி ரூபாய் வரை பணம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தை வழங்குவதற்காக வீரமணி பல்வேறு நிலங்களை விற்பனை செய்ததாகவும் கூறப்படும் நிலையில், அந்த நில விற்பனைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெற்றதா, அதன் மூலம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.
இதனிடையே, இந்த வழக்கில் நடைபெற்றதாகக் கூறப்படும் பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, நிலங்கள் விற்பனை செய்யப்பட்டதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா, அந்தப் பணம் சட்டவிரோதமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் மாநில காவல்துறையினரால் ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனடிப்படையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை மாநில காவல்துறையிடம் இருந்து அமலாக்கத்துறை கோரிப் பெறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான முகாந்தரம் இருப்பதாக அமலாக்கத்துறை கருதினால், அது தொடர்பாக தனியாக விசாரணையை முன்னெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக பணம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்படும் அதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
எனினும், தற்போது அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான அம்சங்கள் குறித்து விசாரிப்பதற்காக மட்டுமே அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் தலையிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... சூடு பிடிக்கும் விசாரணை.! சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..!!