சிரிச்சது குத்தமா?... தீயாய் பரவிய வீடியோவால் கொந்தளித்த மேயர் பிரியா... சி.எம்.விஜய்க்கு சரமாரி கேள்வி...!
இதுகுறித்து மேயர் பிரியா தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஆவேசமாக பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சென்னை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முரளிதரன் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அந்த நிகழ்ச்சி மேடையில் மேயர் பிரியா விஜயைப் பற்றி அவதூறாக பேசும் போது வாய் விட்டு சிரித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரல் ஆனதோடு, தவெக ஆதரவாளர்களின் கடுப்பையும் வாங்கிக் கட்டிக்கொண்டது. இதனால் தவெகவினர் மேயர் பிரியாவை அவதூறாக சோசியல் மீடியாக்களில் விமர்சித்து வந்தனர்.
இதுகுறித்து மேயர் பிரியா தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஆவேசமாக பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில், 2022ஆம் ஆண்டு நான் மேயராகப் பொறுப்பேற்றேன். மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் எனக்கு மேயராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கினார். கடந்த நான்கு ஆண்டுகளாக, மேயர் என்ற முறையிலும், பெண் என்ற முறையிலும், ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும், மாநகராட்சி நிகழ்ச்சியிலும் அன்றைய முதலமைச்சராகவும், இன்றைய கழகத் தலைவராகவும் இருக்கக்கூடிய எங்கள் தலைவர் அவர்கள் எனக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்தார்.
இதையும் படிங்க: முடி வெட்டுனது குத்தமா..? எப்பவுமே நான் தான் டார்கெட்..! ஆதங்கத்தை கொட்டிய மேயர் பிரியா..!!
ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும் அவர் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் எனக்கும் இடமளித்து, தன் அருகிலேயே என்னை நிற்க வைத்து, ஒரு பெண் என்ற முறையிலும், மேயர் என்ற முறையிலும் எனது வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு சென்றார்.
அதேபோல், நம்முடைய இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அண்ணன் அவர்கள், ஒரு சகோதரிக்கு எந்தெந்த வகைகளில் வழிகாட்ட முடியுமோ, அந்தந்த வகைகளில் ஓர் அண்ணனாக இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்குத் துணையாக இருந்தார்.
ஆனால், இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய த.வெ.க. அரசு, மே மாதம் முதலே மாநகராட்சி சார்பாக மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளை ரத்து செய்தும், நிறுத்தி வைத்தும் இருக்கிறது. மாநகராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் ஒதுக்கவில்லை. இது குறித்து எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறோம்.
இவை ஒருபுறம் இருக்க, இன்றைக்கு ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்று சொல்லக்கூடிய சமூக வலைதளப் பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றித் தவறாகச் சித்தரித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் என அனைத்துச் சமூக வலைதளங்களிலும், நான் த.வெ.க. அரசைக் கண்டித்துப் பேசும் ஒவ்வொரு முறையும், அதற்கு மறுநாளே என்னைத் தவறாகச் சித்தரிக்கும் வகையில் வீடியோக்களை எடிட் செய்து வெளியிடுகின்றனர்.
எங்கள் கழகத்தில் இருப்பவர்களையே வைத்து, என்னைப் பற்றித் தவறாகச் சித்தரித்து இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுகின்றனர். இந்த வீடியோக்கள் பொதுமக்களிடையே பரவுவதால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து நான் மாநகரக் காவல் ஆணையரிடமும் புகார் அளித்திருக்கிறேன். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்றைக்கும்கூட என்னை மீண்டும் தவறாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். இதுகுறித்து இன்றும் நான் புகார் அளித்திருக்கிறேன்.
இதற்கான நடவடிக்கையையாவது இன்றைய ஆட்சியாளர்கள் எடுப்பார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும், பெண்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்படும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், நான் ஒரு மேயராகவும், பெண்ணாகவும் இருக்கிறேன். பலமுறை இதுகுறித்துச் சமூக வலைதளங்களில் பேசியும், இதுவரை மௌனம் காக்கக்கூடிய முதலமைச்சராகவே இன்றைய முதலமைச்சர் இருக்கிறார். இதற்கான பதில் எப்போது வரும் என்ற கேள்வியை இந்த இடத்தில் நான் முன்வைக்கிறேன்.
என்னுடைய கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கான ஆட்சியை நடத்தி, பெண்களின் வளர்ச்சிக்கான பாதையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் மூலம் எத்தனையோ பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
ஆனால், இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில், பெண்களுக்கான பாதுகாப்பான சூழலே தமிழ்நாட்டில் இல்லாத அளவுக்கு, தங்களுடைய ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ மூலமாக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதான் உங்களுடைய த.வெ.க. அரசின் உத்தியா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அதேபோல், இன்றைக்கு சென்னையில் மாமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சகோதரி ஒருவர் ஒரு மேடையில் பேசியபோது, அவர் பேசிய கருத்துகளுக்காக அதே இடத்தில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் அக்கா அவர்கள் அவரைக் கண்டித்தார். அதே மேடையில் மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே. சேகர்பாபு அண்ணன் அவர்களும் கண்டித்தார்.
ஆனால், இதுபோன்று ஏதாவது ஓர் இடத்தில் த.வெ.க. நிர்வாகிகள் செய்யும் தவறுகளையோ, த.வெ.க. சார்பில் நடைபெறும் தவறுகளையோ முதலமைச்சரோ அல்லது அங்கிருக்கக்கூடிய அமைச்சர்களோ கண்டித்ததாக ஏதாவது தகவல் இருக்கிறதா?
தொடர்ந்து இதுபோன்ற ‘விர்ச்சுவல் அப்யூசர்ஸ்’ மூலமாக, பெண்களை இழிவாகப் பேசியும், தவறாகச் சித்தரித்தும் வருகின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் அரசாகவே இன்றைய அரசு இருக்கிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற செயல்கள், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடிய பெண்களுக்கு அச்சத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும். பெண்கள் அரசியலுக்கு வருவதற்குத் தடையாகவும் அமையும். எனவே, இதற்கான நடவடிக்கையை ஆட்சியில் இருப்பவர்கள் எடுப்பார்களா என்பதைப் பார்ப்பதற்காகவே இந்தப் பதிவையும் இப்போது வெளியிடுகிறேன்.
தொடர்ந்து இதுகுறித்துப் பேசி வந்தாலும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், எங்களுடைய கழகத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர் ஆகியோரின் ஆதரவு எனக்கு முழுமையாக இருக்கிறது. தொடர்ந்து மக்களுக்காக எனது மக்கள் பணியைச் செய்வேன் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திராவிட இயக்க வழியில் வந்தவர்கள் கண்ணியமாக பேச வேண்டும்..! செங்கோட்டையன் அட்வைஸ்.!!