விடிந்ததும் தமிழகமே பரபரப்பு... வீட்டுக்காவலில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்... நடந்தது என்ன?
பணி நிரந்தரம் கோரி பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் போராட்டத்தை அடுத்து வீடுகளிலேயே சிறை வைக்கப்பட்டதாகப் புகார்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தற்போது வழங்கப்படும் சம்பளத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், பல்வேறு மாவட்டங்களில் பணியாளர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் மேம்பாட்டுச் சங்கம் சார்பில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முன்கூட்டியே அனுமதி கோரியிருந்ததாகவும், அதற்கான அனுமதி 15 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட்டிருந்ததாகவும் உழைப்போர் உரிமைச் சங்கத்தைச் சேர்ந்த பாரதி தெரிவித்துள்ளார்.
ஆனால், போராட்டம் நடைபெறவிருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாளர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
சேலம், நாமக்கல், ராணிப்பேட்டை, திண்டுக்கல், திருப்பூர், திருப்பத்தூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, வேலூர், சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாளர்கள் வீட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலையத்தில் பெண் பணியாளர்கள் சிலர் துன்புறுத்தப்பட்டதாகவும், சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்காமல் தடுத்ததாகவும் பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக உழைப்போர் உரிமைச் சங்கத்தைச் சேர்ந்த பாரதி கூறுகையில், “பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மட்டுமே நடத்த அனுமதி கோரியிருந்தோம். ஆனால், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாளர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இந்த எளிய ஊழியர்கள், கொரோனா காலத்தில் மக்களின் உயிரைக் காப்பாற்றப் பாடுபட்டவர்கள். அவர்கள் தேர்தல் வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றுதான் கோரிக்கை விடுக்கிறார்கள்.
ஆனால், திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி, தொடர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறி, காவல்துறையினர் வீடுகளுக்குச் சென்று அவர்களைத் தடுத்து வைத்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை.
அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதுகூட மிகப்பெரிய குற்றமா? போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இல்லையா? அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்திப் போராடுபவர்களை இவ்வாறு நடத்துவது கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக, பெண் ஊழியர்களை வீடுகளிலேயே முடக்கி வைப்பது வெட்கக்கேடானது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட விரும்பும் ஊழியர்களைத் தடுத்து நிறுத்துகிறது.
போராட்டம் நடத்துவதற்கான உரிமையை மறுக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஊழியர்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள். இன்று உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், ஊழியர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். போராட்டம் நிச்சயமாக நடைபெறும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!