அடேங்கப்பா..! " அம்மாவ பார்த்தாச்சு..! மீனாட்சி அம்மன் கோயிலில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம்..!!
மீனாட்சி அம்மன் கோயிலில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தொடங்கிய மண்டல பூஜைகள் அக்டோபர் 2ஆம் தேதியுடன் நிறைவு பெற்றன. மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் வரலாற்றில் முதன்முறையாக நாள் முழுவதும் சன்னதி கதவுகள் அடைக்கப்படாமல் பக்தர்களுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தன்று சுவாமியை நேரடியாக தரிசிக்க முடியாதவர்கள் மண்டலாபிஷேக காலத்தில் தரிசனம் செய்தால் அதே பலன்களைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
அதன்படி செப்டம்பர் 18 முதல் தொடங்கிய மண்டல பூஜைகள் நேற்று நிறைவுற்றன. முன்தினம் மாலையிலேயே நிறைவு பூஜைகள் தொடங்கின. சுவாமி சன்னதி மற்றும் நவக்கிரக சன்னதி அருகே யாகம் வளர்க்கப்பட்டு நான்கு பிரதான கலசங்களில் புனித நீர் நிரப்பி பூஜைகள் நடைபெற்றன. நேற்று இரண்டு கால பூஜைகள் முடிந்த பிறகு காலை 9.30 மணியளவில் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த நான்கு பிரதான கலசங்களுடன் அம்மன் மற்றும் சுவாமிக்கு தனித்தனியாக 108 கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து வலம் வந்தனர். உச்சிகால பூஜையில் அந்த 108 கலசங்களில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு மண்டல பூஜை முழுமை பெற்றது.
தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி கோயில் திறப்பதற்கு முன்பே அதிகாலை 3 மணிக்கே கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகக் குவிந்தது. கோயில் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்கள் வந்துகொண்டே இருந்ததால் சுவாமி மற்றும் அம்மன் சன்னதி கதவுகள் ஒருமுறையும் மூடப்படவில்லை. சித்திரை வீதியில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். பலர் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். காலை 11 மணிக்குப் பிறகு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. கோயில் நிர்வாகத்தின் தகவலின்படி அதிகாலை முதல் இரவு வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..!! அட.. இந்த பெயரில் தான் அர்ச்சனை செய்தாராம்..!!
மதிய நேரத்திலும் சன்னதி அடைக்காமல் பக்தர்களின் வசதிக்காக தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.மண்டல பூஜை நடைபெற்று வந்த நாட்களில் தினமும் சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்து வந்தனர். நிறைவு நாளில் தொடர் விடுமுறை நாட்கள் சேர்ந்ததால் கூட்டம் பெருமளவில் அதிகரித்தது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் கிழக்கு மற்றும் மேற்கு கோபுர நுழைவு வாயில்கள் வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டு தெற்கு மற்றும் வடக்கு கோபுர வாயில்கள் வழியாக வெளியே அனுப்பப்பட்டனர். வரும் 11ஆம் தேதி நவராத்திரி உற்சவம் தொடங்குவதை முன்னிட்டும் மண்டல பூஜை இன்றுடன் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச தரிசனம் நீட்டிப்பு! செப்.23 வரை கட்டணமில்லை என நிர்வாகம் அறிவிப்பு!