மேகதாது அணை விவகாரம்! தமிழக-கர்நாடக எல்லையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்! போலீசார் குவிப்பு!
காவிரி விவகாரத்தில் எல்லைப் பகுதியில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா நோக்கிச் செல்லும் பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓசூர் எல்லை பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக–கர்நாடக எல்லைப் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா நோக்கிச் செல்லும் அரசு பேருந்துகள் ஓசூர் எல்லைப் பேருந்து நிலையத்திலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள இருந்த பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாய அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த அணைத் திட்டம் தமிழகத்தின் நீர்வளத்தை பாதிக்கும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக எல்லைப் பகுதியில் சில கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. மறுபுறம், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வரும் பேருந்துகள் வழக்கம்போல எந்த தடையும் இன்றி இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர். பாணியில் விஜய் அதிரடி திட்டம்! மேகதாது அணை - காவிரி விவகாரத்தில் கையில் எடுக்கும் புதிய ஆயுதம்!
பேருந்து சேவை பாதிக்கப்பட்டதால், ஓசூரில் இருந்து கர்நாடகா செல்லும் பயணிகள் முதலில் தமிழக எல்லை வரை நகரப் பேருந்துகளில் பயணம் செய்து, அங்கிருந்து ஆட்டோ அல்லது பிற தனியார் வாகனங்கள் மூலம் அத்திப்பள்ளியை அடைந்து, பின்னர் அங்கிருந்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கார் மற்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் எல்லையை கடந்து சென்று வருகின்றன. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க தமிழக–கர்நாடக எல்லைப் பகுதிகளில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எல்லை பகுதியில் நிலவும் சூழ்நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு நிலைமை சீரானதும் பேருந்து சேவை மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!! மேகதாது அணை விவகாரம்! தவெக புது ரூட்!!